நிதிஷ்குமார் கட்சிக்கு லாலு பிரசாத் ஆதரவு: பிஹாரில் இன்று மாநிலங்களவை இடைத் தேர்தல்

நிதிஷ்குமார் கட்சிக்கு லாலு பிரசாத் ஆதரவு: பிஹாரில் இன்று மாநிலங்களவை இடைத் தேர்தல்
Updated on
1 min read

பிஹாரில் 2 உறுப்பினர்களுக்கான மாநிலங்களவை இடைத் தேர்தல் இன்று வியாழக்கிழமை நடைபெறுகிறது. இத்தேர்தலில் நிதிஷ்குமாருக்கு லாலு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் 21 எம்.எல்.ஏ.க்களும் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தலைமையில் கூடி, ஐக்கிய ஜனதா தள வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே நிதிஷ்குமாருக்கு காங்கிரஸ் (4), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1) மற்றும் 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது பற்றி லாலு கூறுகையில், “மதவாத சக்திகளின் வளர்ச்சியை தடுப்பதற்காக ஐக்கிய ஜனதா தளத்திற்கு ஆதரவளிக்க முடிவு செய்தோம். இதில் பாஜகவின் சதியையும் முறியடிப்பது அவசியம். இந்த ஆதரவு வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியாக மாறுமா என்று இப்போது சொல்ல முடியாது” என்றார்.

இந்நிலையில் மாநிலங்களவை இடைத் தேர்தலையொட்டி ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மொத்தமுள்ள 117 எம்.எல்.ஏ.க்களில் 25 பேர் இதில் பங்கேற்கவில்லை. இந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான கியானேந்தர்குமார் தலைமையில் பாட்னாவில் கூட்டம் நடத்தினர்.

இதுகுறித்து கட்சியின் தேசிய தலைவர் சரத்யாதவ் கூறுகையில், “எங்கள் வேட்பாளர்கள் இருவரும் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள். இவர்களுக்கு வாக்களிக்கும்படி எங்கள் எம்.எல்.ஏ.க்களிடம் கூறிவிட்டோம். வராத எம்.எல்.ஏ.க்கள் பற்றி கவலை இல்லை” என்றார்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு

இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பற்றி கியானேந்தர்குமார் கூறுகையில், “இந்தத் தேர்தலில் பணம் என்றே பேச்சுக்கே இடமில்லை. நடைபெறவிருக்கும் அரசியல் போரில் வெல்ல, எங்களுக்கு சுமார் 50 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல் மற்றும் மாநிலங்களவை தேர்தலில் கட்சிக் கொறடாவின் உத்தரவுக்கு கட்டுப்படவேண்டிய அவசியமில்லை என்று கடந்த 2007-லேயே தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது” என்றார்.

மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த பாஜகவின் ராஜீவ் பிரதாப் ரூடி, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் ராம்கிருபால் யாதவ் (பாஜகவில் இணைந்தவர்), லோக் ஜனசக்தி கட்சியின் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகிய மூவரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால் இவர்களின் மாநிலங்களவை எம்.பி. பதவி காலியானது. இந்த 3 பதவிகளில், ஒன்றில் ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால், மற்ற 2 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இந்த 2 இடங்களுக்கு ஐக்கிய ஜனதா தளம் சார்பில் தேசிய பொதுச் செயலாளர் குலாம் ரசூல் பால்யாவி மற்றும் நிதிஷ்குமாரின் முன்னாள் ஆலோசகர் பவன்குமார் வர்மா போட்டியிடுகின்றனர். இவர்களை எதிர்த்து ஐக்கிய ஜனதா தள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சார்பில் இருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் ரூ.30 லட்சம் முதல் 1 கோடி வரை கொடுத்து விலைக்கு வாங்க முயற்சி நடப்பதாக புகார் கூறப்படுகிறது.

எனவே இந்த தேர்தல் நிதிஷ்குமாருக்கு பெரிய சவாலாகி விட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in