தலாய்லாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி: விமர்சித்த ஓவைஸி

மோடி, தலாய்லாமா கோப்புப்படம்
மோடி, தலாய்லாமா கோப்புப்படம்
Updated on
1 min read

திபெத் மதகுரு தலாய்லாமாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "தலாய்லாமாவில் 86வது பிறந்தநாளை ஒட்டி நான் அவருக்கு தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன். அவருக்கு நல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் சேர வாழ்த்தினேன்" என்று தெரிவித்துள்ளார்.

பிரதமரின் வாழ்த்தைக் குறிப்பிட்டு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி ஒரு ட்வீட் பதிவு செய்துள்ளார். அதில், மிக்க நன்று சார். ஆனால், நீங்கள் மட்டும் தலாய்லாமாவை நேரடியாக சந்தித்துப் பேசியிருந்தீர்கள் என்றால் சீனாவுக்கு அது ஒரு வலுவான செய்தியைக் கடத்தியிருக்கும் என்று பதிவு செய்துள்ளார்.

ஏப்ரல் 2020-க்கு முந்தைய நிலைக்கு சீனத் துருப்புகள் திரும்ப வேண்டும் என்று இந்தியா வலியுறுத்திவருகிறது. ஆனால், சீனா அதற்கு செவிமடுக்கவில்லை. இதனால் இந்திய சீன எல்லைப் பிரச்சினை எப்போதுமே நிலவி வருகிறது. இந்நிலையில், சீனாவுக்குப் பிடிக்காத தலாய்லாமாவுக்கு பிரதமர் தொலைபேசியில் வாழ்த்துச் சொன்னதைவிட நேரில் சொல்லியிருந்தால் இன்னும் வலுவான செய்தி கடத்தப்பட்டிருக்கும் என ஓவைஸி கூறியுள்ளது ஏற்கெனவே எல்லைப் பிரச்சினையில் புகைந்து கொண்டிருக்கும் இந்திய சீனா தகராறுக்கு தூபம் போடுவதுபோல் அமைந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இதற்கு முன்னதாகவும்கூட பிரதமர் மோடி, திபெத் தலைவர் தலாய்லாமாவின் பிறந்தநாளின்போது வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ஆனால், கடந்த ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய சீன படைகளுக்கு இடையே நடைபெற்ற மோதல் காரணமாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த தலாய் லாமா? சீனாவுக்கு ஏன் அவர்மீது கோபம்?

திபெத்தில் டக்ஸ்டர் என்ற கிராமத்தில் (1935) பிறந்தவர். இயற்பெயர் லாமொ தொண்டுப். இவர் பிறந்தபோதே பல அற்புதங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. பல்வேறு சோதனைகள் நடத்தி, இவர் முந்தைய தலாய் லாமாவின் மறுபிறப்பு என்று முடிவு செய்தனர். இவரது பெயர் ‘டென்சின் கியாட்சோ’ என மாற்றப்பட்டது.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 6 வயதில் கல்வி கற்கத் தொடங்கினார். நாள் முழுவதும் படிப்பு, தியானம், விளையாட்டு என இளமைப் பருவம் கழிந்தது. வயது ஏற ஏற விளையாட்டுகளைக் குறைத்துக்கொண்டு ஆன்மிகத்தில் கவனம் செலுத்தினார். 25-வது வயதில் புத்த சமயத் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். திபெத்துக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்று சீனாவிடம் கோரி வருகிறார். ஆனால், சீனாவோ இது சம்பந்தமாக பேச்சு நடத்த தயாராக இல்லை. மாறாக, இவரை புரட்சிக்காரராக கருதுகிறது. திபெத்துக்கு சுயாட்சி வழங்கும் தனது கோரிக்கையை என்றாவது ஒருநாள் சீனா செவிமடுக்கும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டுவருகிறார்.

இதனால்தான் தலாய்லாமாவுடன் இந்தியா நெருக்கம் காட்டினால் சீனாவுக்கு கோபம் வரும் என்பதால் ஓவைஸி இப்படியொரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in