Published : 06 Jul 2021 03:06 PM
Last Updated : 06 Jul 2021 03:06 PM

கரோனா 3-வது அலை ஆகஸ்ட் மாதம் தாக்க வாய்ப்பு: எஸ்பிஐ வங்கி ஆய்வறிக்கை

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

நாட்டில் கரோனா 2-வது அலையே இன்னும் முடியாத நிலையில், கரோனா 3-வது அலை, ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் தாக்க வாய்ப்புள்ளதாகவும், செப்டம்பர் மாதத்தில் உச்சத்தை அடையும் என்றும் எஸ்பிஐ வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா 2-வது அலை மே மாதம் 3-வது வாரத்தில் உச்சத்தை அடையும் என்று எஸ்பிஐ வங்கியின் ஆய்வறிக்கை ஏறக்குறைய சரியாகக் கணித்து அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா 2-வது அலையின் தாக்கம் குறையத் தொடங்கியதையடுத்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

கரோனா தடுப்பு வழிமுறைகளான சமூக விலகல், முகக்கவசம், தடுப்பூசிசெலுத்துதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவற்றை முறையாகப் பின்பற்றாவிட்டால், 3-வது அலை விரைவாக வருவது சாத்தியம் என்று ஏற்கெனவே மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் எஸ்பிஐ வங்கியின் ஆய்வறிக்கையில் கரோனா 3-வது அலை ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் தாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “கோவிட்-19: தி ரேஸ் டூ ஃபினிஷிங் லைன்” என்ற தலைப்பில் கரோனா வைரஸ் 3-வது அலை குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா வைரஸ் 3-வது அலையிலிருந்து மக்களைக் காக்கும் முக்கியக் கேடயமாக இருக்கப் போவது தடுப்பூசி மட்டும்தான் என்று உலகளாவிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கரோனா 2-வது அலையில் பாதிக்கப்பட்ட மக்களின் அளவில் 1.7 மடங்கு 3-வது அலையில் இருக்கும்.

இந்தியாவில் தற்போது முழுமையாக 4.6 சதவீதம் மக்கள் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 20.8 சதவீதம் பேர் ஒரு டோஸ் செலுத்தியுள்ளனர்.

ஆனால், இதை அமெரிக்காவோடு ஒப்பிடுகையில் 47.1 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். பிரிட்டனில் 48.7சதவீதம் பேர், இஸ்ரேலில்59.8 சதவீதம் பேர், ஸ்பெயினில் 38.5 சதவீதம்பேர், பிரான்ஸில் 31.2சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

இந்தியாவில் தற்போது கரோனா 2-வது அலை இன்னும் முடியாத நிலையில் ஜூலை மாதம் 2-வது வாரத்தில் தினசரி பாதிப்பு 10ஆயிரம் பேர் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகும்.

ஏற்கெனவே இருக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்க்கும் போது, கரோனா மூன்றாவது அலை ஆகஸ்ட் மாதம் 2-வது வாரத்தில் தாக்க வாய்ப்புள்ளது, அதன்பின் அடுத்த ஒரு மாதத்தில் அதாவது செப்டம்பர் மாதத்தில் உச்சமடையும்.

தற்போதுள்ள நிலையில் தினசரி பாதிப்பு 45 ஆயிரத்துக்கு குறைந்தாலும் கரோனா 2-வது அலை இன்னும் நாட்டில் முடிவுக்கு வரவில்லை என்பதையே காட்டுகிறது.

12 மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ்களால் 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 15 மாவட்டங்களில் புதிதாக பாதிக்கப்பட்டாலும், இதனால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாக இருக்கிறது.

இதற்கு காரணம் தடுப்பூசி செலுத்துமட்டும்தான். இந்தியாவில் நாள்தோறும் 40 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், கிராமப்புறங்களோடு நகர்புறங்களை ஒப்பிடுகையில் தடுப்பூசி செலுத்தும் வீதம் கிராமங்களில் குறைவாக இருந்து வருகிறது

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், அசாம், பிஹார், ஜார்க்கண்ட மாநிலங்கள் வேகமாகச் செயல்படுவது அவசியமாகும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x