கறுப்புப் பணம்: இன்று சிறப்பு புலனாய்வுக் குழுவின் முதல் கூட்டம்

கறுப்புப் பணம்: இன்று சிறப்பு புலனாய்வுக் குழுவின் முதல் கூட்டம்
Updated on
2 min read

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணத்தை மீட்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது.

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணத்தை மீட்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

13 பேர் குழு

பல ஆண்டுகளாக இழுபறியில் உள்ள இந்த வழக்கில், ஓய்வுபெற்ற நீதிபதிகள் எம்.பி.ஷா, அரிஜித் பசாயத் ஆகியோரைக் கொண்ட 13 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 27-ம் தேதி நடைபெற்ற நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. இக்குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. கறுப்புப் பணத்தை விரைவில் மீட்டு இந்தியா வுக்குக் கொண்டு வருவது குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளது.

கறுப்புப் பணத்தை மீட்கும் விவகாரத்தில் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து குழு உறுப்பினர்கள் அனைவரும் இன்றைய கூட்டத்தில் விவரங்களை அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.

26 வங்கிக் கணக்குகள்

கறுப்புப் பணத்தை மீட்கும் விஷயத்தில் அரசின் கொள்கைகள், வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை, வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ள கணக்குகள் குறித்து மத்திய அரசுத் துறைகளிடம் தற்போதுள்ள ஆவணங்கள் ஆகியவை குழுவின் தலைவர் மற்றும் துணைத் தலைவரிடம் எடுத்துக் கூறப்பட உள்ளது.

லீக்டென்ஸ்டைன் எல்ஜிடி வங்கியில் இந்தியர்களுக்குச் சொந்தமான 26 வங்கிக் கணக்கு களை ஜெர்மனி ஏற்கெனவே இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள், கறுப்புப் பணத்தை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது அறிக்கையாகவும் அளிக்கப்பட உள்ளது.

சிறப்பு புலனாய்வுக் குழு உறுப்பினர்கள்

1. எம்.பி.ஷா, தலைவர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி (1998-2003)

2. அரிஜித் பசாயத், துணைத் தலைவர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி (2001-09)

3. ராஜீவ் தாக்ரு, மத்திய வருவாய்த்துறை செயலர்

4. ஹெச்.ஆர்.கான், ரிசர்வ் வங்கி துணை கவர்னர்

5. சையது ஆசிஃப் இப்ராஹிம், புலனாய்வுத்துறை இயக்குநர்.

6. ராஜன் கடோச்சி, அமலாக்கப்பிரிவு இயக்குநர்

7. ரஞ்சித் சின்ஹா, சிபிஐ இயக்குநர்

8. ஆர்.கே.திவாரி, நேரடி வரிகள் துறை தலைவர்

9. ராஜீவ் மேத்தா, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தலைமை இயக்குநர்

10. நஜீப் ஷா, வருவாய் புலனாய்வுப் பிரிவு தலைமை இயக்குநர்

11. பி.கே.திவாரி, நிதி புலனாய்வுப் பிரிவு இயக்குநர்

12. அலோக் ஜோஷி, 'ரா' அமைப்பு செயலர்

13. அகிலேஷ் ரஞ்சன், வெளிநாட்டு வரிகள் மற்றும் ஆய்வுப்பிரிவு இணைச் செயலர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in