

சிறுபான்மையினர் மீதான தீவிரவாத வழக்குகளை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே பரிந்துரை செய்திருப்பதற்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பில் கோவா தலைநகர் பனாஜியில் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி பேசியதாவது:
மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் சிறுபான்மையினர் மீதான தீவிரவாத வழக்குகளை மறுஆய்வு செய்யுமாறு அவர் பரிந்துரை செய்துள்ளார்.
சட்டத்தை மீறுபவர்களுக்கு மதம் கிடையாது. சட்டவிரோதிகளை கைது செய்வதா, விடுதலை செய்வதா என்பதை மதம் தீர்மானிக்க முடியாது. சட்டத்தை மீறும் நபர்களுக்கு மதத்தின் பெயரின் எந்த சலுகையும் அளிக்கப்படக்கூடாது.
சட்டம் அனைவருக்கும் பொதுவானது. குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அந்த நபர் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. வாக்கு வங்கி அரசியலுக்காக மத்திய அரசு இதுபோன்று நாடகமாடுகிறது என்றார்.
மத்திய சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் மீதும் முதல்வர் மோடி ஊழல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது:
விற்பனை வரி, சுங்க வரி என பல்வேறு வரிகளைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போதுதான் முதல்முறையாக “ஜெயந்தி” வரி பற்றி கேள்விப்படுகிறேன்.
அவர் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது “ஜெயந்தி” வரியை செலுத்தவில்லை என்றால் எந்தக் கோப்புகளும் நகராதாம், அப்படியே தேங்கி நின்றுவிடுமாம். என் வாழ்நாளில் இதுபோன்ற வரிவிதிப்பை பார்த்ததே இல்லை. இந்த வரி எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது என்றார்.
ஜெயந்தி நடராஜன் பதிலடி
“குஜராத் அரசின் சில திட்டங்களுக்கு நான் ஒப்புதல் அளிக்காததால், தன் மீது தனிப்பட்ட முறையில் உள்நோக்கத்தோடு மோடி தாக்குதல் நடத்துவதாக,” ஜெயந்தி நடராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.