மேகேதாட்டு அணைத் திட்டம் வருவது உறுதி: கர்நாடக அமைச்சர் பசவராஜ் பொம்மை பேட்டி

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை | படம் ஏஎன்ஐ
கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை | படம் ஏஎன்ஐ
Updated on
1 min read

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணைத் திட்டம் உறுதியாகச் செயல்படுத்தப்படும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடியில் அணை கட்ட முயற்சிக்கிறது. இதற்கு தமிழக‌அரசும் விவசாய அமைப்புகளும் நீண்ட காலமாக‌எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கு எதிராக‌தமிழக அரசின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் 17-ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 'மேகேதாட்டு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது' என வலியுறுத்தினார். இதற்கு கன்னட அமைப்புகளும் கர்நாடக‌விவசாய சங்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதனிடையே கர்நாடக முதல்வர் பிஎஸ் எடியூரப்பா, தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இருதரப்பு பேச்சு நடத்தி சிக்கல்களைக் களைய வேண்டும்.

மேகேதாட்டு திட்டம் என்பது கர்நாடக மக்களின் குடிநீர் திட்டத்துக்காக செயல்படுத்துவது, குறிப்பாக பெங்களூரு நகரத்தின் குடிநீராகச் செயல்படுத்தப்படுகிறது. தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்கப்படாது” எனத் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கிடையே கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

கர்நாடக மாநிலத்தில், காவிரி ஆற்றின் படுகையின் விவசாயிகளின் நலனுக்காக தமிழகதத்துடன் தொடர்ந்து நாங்கள் சட்டப்போராட்டம் நடத்துவோம். இந்தச் சட்டப்போராட்டத்தில் நிச்சயம் நாங்கள் வெல்வோம் என்று நம்புகிறோம்.

நிச்சயமாக நாங்கள் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு திட்டத்தைச் செயல்படுத்துவோம். உச்ச நீதிமன்ற உத்தரவு, வழிகாட்டல் அடிப்படையில் மத்திய அரசு கேட்கும் அனைத்துவிதமான ஆவணங்களையும் அளித்து மேகேதாட்டு அணை கட்டுவதற்கு அனுமதிபெறுவோம்.

மேகேதாட்டு அணைத் திட்டம் என்பது தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களின் குடிநீர் தேவையையும் போக்கும், மின் உற்பத்தியையும் அதிகரிக்கும். இரு மாநிலங்களுக்கும் நலன் கிடைக்கும் இந்தத் திட்டத்தை தமிழக அரசு எந்தவிதமானக் காரணமும் இன்றி எதிர்த்துத் தடைகளை விதிக்கிறது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in