

உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் சிங் யாதவ் ஆட்சியில் கோமதி நதி கரைகள் அழகுப்படுத்துதல் திட்டத்தில் ரூ.1500 கோடி ஊழல் புகார் எழுந்தது. இவ்வழக்கை விசாரிக்கும் சிபிஐ நேற்று 40 இடங்களில் சோதனை நடத்தி புதிய வழக்கை பதிவு செய்தது.
பாஜக ஆளும் உ.பி.யில் உருவாகி சுமார் 200 கி.மீ தொலைவிற்கு 20 நகரங்களில் ஓடும் நதி கோமதி. இது, தலைநகரான லக்னோவின் முக்கிய நதியாக சுமார் 12 கி.மீ. தொலைவை கடக்கிறது. இந்த நதியிலிருந்து லக்னோவிற்கு குடிநீரும் விநியோகம் செய்யப்படுகிறது. குஜராத்தின் அகமதாபாத்தில் சபர்மதி நதிக்கரைகள் அழகுபடுத்தப்பட்டதை போல், கோமதி நதியின் கரைகளையும் அழகுபடுத்த தனது ஆட்சியில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் முடிவு செய்தார்.
இதில் கோமதி நதிக்கரையில் பூங்காக்கள், உடற்பயிற்சிக்கான நடைபாதை, விளையாட்டு அரங்கங்கள், நிழல் தரும் மரங்கள் உள்ளிட்ட பல வசதிகள் செய்யத் திட்டமிடப்பட்டன. ரூ.1,600 கோடிக்கானத் திட்டத்திற்கு அகிலேஷ் அரசு ரூ.1,437 கோடி நிதியை ஒதுக்கியது.
இதில், ஊழல் புகார் எழுந்த நிலையில் அப்பணி சுமார் 40 சதவிகிதம் மட்டும் முடிந்த நிலையில் நிறுத்தப்பட்டது. அகிலேஷை அடுத்து 2017-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த ஊழலை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை குழு அமைத்தார்.
இக்குழுவின் அறிக்கையின் பேரில் ஆதித்யநாத் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தார்.
முதல் கட்டமாக 173 தனியார் மற்றும் 16 அரசு பொறியாளர்கள் சேர்த்து 189 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. நேற்று உ.பி, ராஜஸ்தான், டெல்லி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் நாற்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ திடீர் சோதனை நடத்தியது. இதில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சிபிஐ இரண்டா வதாக ஒரு புதிய வழக்கை பதிவு செய்துள்ளது.
இவ்விரண்டு வழக்குகளிலும் முன்னாள் முதல்வர் அகிலேஷின் பெயர் இன்னும் சேர்க்கப் படவில்லை. எனினும், அவர் மீதானவிசாரணையை சிபிஐ தொடர்கிறது. உ.பி.யில் அடுத்த வருடம்சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த வழக்கு அரசியல் முக்கியத்துவம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.