

ஒரு முதல் அமைச்சராக கடந்த ஒரு வருடமாக செயல்படாமல் இருந்தவர் அர்விந்த் கேஜ்ரிவால் என டெல்லி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜன் மக்கன் கருத்து கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி எனும் பெயரில் புதிதாக கட்சியை துவங்கி தனிமெஜாரிட்டியுடன் முதன் முறையாக டெல்லியில் ஆட்சி அமைத்தவர் கேஜ்ரிவால். இவர் தனது ஒரு வருடம் ஆட்சியை நிறைவு செய்தது குறித்து முன்னாள் மத்திய அமைச்சருமான அஜய் மக்கன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த ஒரு வருடத்தில் ஒரு செயல்படாத முதல் அமைச்சராக இருந்தவர் கேஜ்ரிவால். இவரது ஆட்சியில் புதிதாக ஒரு மேம்பாலம் கட்டப்படவில்லை. புதிய பள்ளி மற்றும் கல்லூரிகள் துவக்கப்படவில்லை. புதிய சாலைகளோ, திட்டங்களோ இல்லை. ஏழைகளுக்கான புதிய திட்டங்கள் இல்லை. புதிய அரசு பேருந்து மற்றும் அதற்கான டெப்போக்களும் கூடக் கிடையாது. தனது தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தது போல், புதிய மருத்துவமனை மற்றும் இலவச வைபை இல்லை.
ஊழல் ஒழிப்பதன் பெயரில் டெல்லிவாசிகளை தவறாக வழி நடத்தி ஏமாற்றி இருக்கிறார். இவரது அமைச்சரவையின் மூன்றில் ஒரு பங்கினர் ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கி நீக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் வீழ்ச்சி அடைந்து வருவதை கண்டு கொள்ளாத அரசிற்கு மத்திய அரசுடன் மோதிக் கொள்ளவே நேரம் சரியாக உள்ளது. சாதாரண பொதுமக்களுக்காக எதையும் செய்யாத டெல்லி அரசு, எம்.எல்.ஏக்களின் ஊதியங்களை மட்டும் உயர்ந்த்தி உள்ளது.
தன் அரசியல் ரீதியாக நடத்தும் மோதலினால் மக்களை குழப்ப முயற்சிக்கிறது. ஆட்சியில் வெளிப்படைத்தன்மை இல்லாத கேஜ்ரிவால் அரசு, விதிமுறைகளை மீறுவதில் முன்னணி வகிக்கிறது. தனது தவறான ஆட்சியை மறைக்கும் பொருட்டு உள்நோக்கத்துடன் மத்திய அரசு மற்றும் மற்ற அரசு அமைப்புகளுடன் வீணான மோதல் நடத்துகிறது. இதனால், கேஜ்ரிவாலின் ஆட்சியில் டெல்லி போராட்டங்களின் தலைநகரமாகி விட்டது.
ஊழல் ஒழிப்பு, நேர்மை மற்றும் எளிமை எனப் பேசும் கேஜ்ரிவால், உண்மையில் அதை கடைப்பிடிப்பதில்லை. இவரது ஆட்சியில் மிகவும் அதிகமான ஊதியத்திற்கு தன் ஆம் ஆத்மி கட்சியினரை பணியில் அமர்த்தி உள்ளார். தன் கட்சியின் தேசிய நிர்வாகியான ஆஷிஷ் கேத்தானை டெல்லியின் வளர்சிக் கழகத்தின் உப தலைவராக ஒரு மாநில அமைச்சரின் அந்தஸ்துடன் நியமித்துள்ளார். மகளிர் ஆணையத்தின் தலைவராக ஸ்வாதி மாலிவாலுக்கு ரூபாய் ஒன்றை லட்சம் மாத சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவன்றி 200 கட்சியினருக்கு அரசின் பல்வேறு நிலையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அரசின் வருமானம் காங்கிரஸ் ஆட்சி செய்த போது இருந்ததை விடக் குறைந்து விட்டது.
டெல்லி என்பது துணைநிலை ஆளுநரால் நிர்வாகிக்கப்படும் ஒரு யூனியன் பிரதேசம். டெல்லியின் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என முடிவு செய்த கேஜ்ரிவாலுக்கு இம் மாநிலத்தின் ஆட்சி நிலை குறித்து நன்கு தெரியும். ஆனால், இதையும் மீறி ஆட்சியில் அமர்ந்த பின் டெல்லியின் உயர் அதிகாரிகளுடன் அநாவசியமாக மோதல் நடத்துகிறார். இந்த உயர் அதிகாரிகள் அனைவரும் ஆட்சி நிர்வாகத்தின் கருவிகள் மற்றும் முதுகெலும்பு போல் ஆனவர்கள். இதை உணர்ந்து கேஜ்ரிவால் இனி வரும் நாட்களிலாவது தாம் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.