

மறைந்த ராம் விலாஸ் பாஸ்வான் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளார். இந்தியாவின் மிகுந்த அனுபவமிக்க நாடாளுமன்ற உறுப்பினரான அவரது பிரிவால் வாடுகிறேன் எனக் கூறியுள்ளார்.
லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் கடந்த ஆண்டு காலமானார். அவரது மகன் சிராக் பாஸ்வான் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோதே கட்சியின் தலைவராக முக்கிய முடிவுகளை எடுத்து வந்தார்.
பிஹாரில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) தனித்துப் போட்டியிட்டது. ஆனால் அங்கு பாஜக – ஐக்கிய ஜனதாதள கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது.
எனினும் சிராக் பாஸ்வான் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்தார். பிரதமர் மோடியுடன் நல்லுறவை பேணி வருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை மாற்றப்பட உள்ளது. இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது ராம்விலாஸ் பாஸ்வான் வகித்த மத்திய அமைச்சர் பதவி சிராக் பாஸ்வானுக்கு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி இருந்தது.
இந்தநிலையில் லோக் ஜன சக்தி கட்சி எம்.பி.க்கள் 5 பேர் சிராக் பாஸ்வானுக்கு எதிராக குரல் எழுப்பினர். சிராக் பாஸ்வானின் சித்தப்பாவும் எம்.பி.யுமான பசுபதி குமார் பராஸ் தலைமையில் அவர்கள் அணி திரண்டனர். செயற்குழுவில் சிராக் பாஸ்வானை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தநிலையில் ராம் விலாஸ் பாஸ்வானின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிராக் பாஸ்வான் எழுதியுள்ள புத்தகம் வெளியிடப்பட்டது. அப்போது பேசிய சிராக் பாஸ்வான் ‘‘நான் அநாதையல்ல. சிங்கத்தின் மகன் ’’ என்று மீண்டும் கூறினார். இந்தநிலையில் ராம் விலாஸ் பாஸ்வானின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
“இன்று, எனது நண்பரான மறைந்த ராம் விலாஸ் பஸ்வான் பிறந்தநாள். அவரது பிரிவால் மிகவும் வாடுகிறேன். இந்தியாவின் மிகுந்த அனுபவமிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அவர். சிறந்த நிர்வாகிகளுள் அவரும் ஒருவர். பொது சேவை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரமளிப்பதில் அவரது பங்களிப்பு என்றும் நினைவில் கொள்ளப்படும்” என்று பிரதமர் வெளியிட்டுள்ள தெரிவித்துள்ளார்.