மேகேதாட்டு திட்டம் இரு மாநிலங்களுக்கும் நன்மை தரும்; தேவையில்லாமல் தமிழக அரசு எதிர்கிறது: கர்நாடக அமைச்சர் பசவராஜ் பொம்மை கருத்து

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை | படம் ஏன்ஐ
கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை | படம் ஏன்ஐ
Updated on
1 min read

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட உள்ள மேகேதாட்டு அணைத் திட்டம், தமிழகம், கர்நாடகம் இரு மாநிலங்களுக்கும் நன்மைத் தரக்கூடியது. ஆனால் தமிழகத்தில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தேவையில்லாமல் இந்தத் திட்டத்தை எதிர்க்கிறது என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவவராஜ் பொம்மை கருத்துத் தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடியில் அணை கட்ட முயற்சிக்கிறது. இதற்கு தமிழக‌அரசும் விவசாய அமைப்புகளும் நீண்ட காலமாக‌எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கு எதிராக‌தமிழக அரசின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் 17-ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 'மேகேதாட்டு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது' என வலியுறுத்தினார். இதற்கு கன்னட அமைப்புகளும் கர்நாடக‌விவசாய சங்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதனிடையே கர்நாடக முதல்வர் பிஎஸ் எடியூரப்பா, தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இருதரப்பு பேச்சு நடத்தி சிக்கல்களைக் களைய வேண்டும்.

மேகேதாட்டு திட்டம் என்பது கர்நாடக மக்களின் குடிநீர் திட்டத்துக்காக செயல்படுத்துவது, குறிப்பாக பெங்களூரு நகரத்தின் குடிநீராகச் செயல்படுத்தப்படுகிறது. தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்கப்படாது” எனத் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கிடையே கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு ேநற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

“ மேகேதாட்டுவில் கர்நாடக அரசு தனது எல்லைக்குள் கட்டுமானத்தை தொடங்கி இருக்கிறது. காவிரி நதிநீர் பங்கீடாக இருக்கட்டும், சிறிய நீரோடையாக இருக்கட்டும், தமிழகம் நீ்ண்ட காலமாகப் தகராறு செய்து வருகிறது. ஆனால், காவிரி நீர் ஆணையம், தீர்ப்பாயம் உத்தரவு தெளிவாக இருக்கிறது.

மேகேதாட்டுவில், எங்கள் எல்லைக்குள்தான் கட்டுமானத்தை தொடங்கி இருக்கிறோம். தமிழகத்தின் பகுதிக்குச் செல்லும் நீரை நாங்கள் தடுக்கவில்லை. கூடுதல் நீர்கேட்டுத்தான் தமிழகம் சார்பில்தான் உச்ச நீதிமன்றம் சென்றது.

தமிழகத்தில் அமைந்துள்ள புதிய அரசு, இதை அரசியல் சாகசமாக மாற்ற முயல்கிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தேவையில்லாமல் இந்தத் திட்டத்தை எதிர்க்கிறது .நாங்கள் சட்டப்படி இதில் போராடுவோம். எடியூப்பாவின் கடிதத்துக்கும் தமிழக முதல்வர் பதில் அளித்துள்ளார்.

மேகேதாட்டு அணையிலிருந்து குடிநீர் தேவைக்காகவே நீர் கொண்டு செல்லப்படுகிறது, தமிழகத்துக்கும் நீர் கிடைக்கும். மழை பற்றாக்குறையாக இருக்கும்போது, இங்கு நீர் தேக்கி வைக்கப்படும், அதேபோல கிருஷ்ணராஜ சாஹரிலும் நீர் தேக்கி வைக்கப்பட்டு குடிநீருக்காகப் பயன்படும். இந்த திட்டத்துக்கு தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது, எங்கள் வழக்கறிஞர்களும் ஆஜராகியுள்ளார்கள்”
இவ்வாறு பொம்மை தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in