ரஃபேல் ஒப்பந்தத்தில் சோனியா காந்தி குடும்பம் விரும்பிய கமிஷன் கிடைக்கவில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா | கோப்புப்படம்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா | கோப்புப்படம்
Updated on
2 min read


காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிக்க புதிதாக ஏன் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யவில்லை. ஏனென்றால், சோனியா காந்தி குடும்பத்தார் விரும்பிய கமிஷன் கிடைக்கவில்லை என்று காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாஜக பதில் அளித்துள்ளது.

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு கொள்முதல் செய்தது. இந்த விமானக் கொள்முதல் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுகுறித்து விசாரிக்க பிரான்ஸ் அரசு நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்துள்ளது.

இந்த விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் கட்சி, ரஃபேல் போர் விமானக் கொள்முதல் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு ஏன் பிரதமர் மோடி தயங்குகிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா பதில் அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது, இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிக்க ஏன் நினைக்கவில்லை. அப்போது ஏன் ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யவில்லை.

ஏனென்றால், சோனியா காந்தி குடும்பத்தாருக்கு விரும்பிய கமிஷன் கிடைக்கவில்லை.
மீண்டும் காங்கிரஸ் கட்சி நாட்டையும், பிரதமர் மோடியையும் அவமானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. பிரதமர் மோடியின் தோற்றத்தையும், அவரின் தாடியையும் கிண்டல் செய்கிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, இதேபோன்ற யுத்தியைப் பயன்படுத்தி பிரதமர் மோடியை அவமானப்படுத்த காங்கிரஸ் முயன்றது. ஆனால், அதில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததைப் பார்த்தோம். நிராகரிக்கப்பட்ட டூல்கிட் மூலமும் காங்கிரஸ் கட்சியினர் பரிசோதிக்க விரும்பினால், இந்த நாட்டு மக்கள் நிச்சயம் ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பதிலடி கொடுப்பார்கள்.

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரங்களில் உள்ள நடைமுறைகளையும், ஒப்பந்தங்களையும் ஆய்வு செய்த தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகம், உச்ச நீதிமன்றம் நற்சான்றுஅளி்த்துள்ளன. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

ஆனால், காங்கிரஸ் கட்சி தங்கள் ஆட்சியில் நடந்த ஒப்பந்தப் புள்ளி குறித்து அப்பட்டமாக பொய் கூறுகிறது. திட்டமிடலுக்கும், ஒப்பந்தப் புள்ளிக்கும் வேறுபாடு இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஒப்பந்தப் புள்ளிக் கோரினால், ஏன் ரஃபேல் போர்விமானங்கள் கொள்முதல் செய்யப்படவில்லை.

இதன் மூலம் காங்கிரஸ் கட்சி குழப்பத்தையும், போலித்தனத்தையும் பரப்பி, தன்னால் என்ன சிறந்ததைச் செய்ய முடியுமோ அதைச் செய்கிறது. இதனால், இந்தியாவுக்கு எதிரான சக்திகள்தான் பயன் அடைகின்றன
இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in