Published : 05 Jul 2021 03:12 AM
Last Updated : 05 Jul 2021 03:12 AM

மத வெறுப்பை தூண்டுவதாக இந்திய ட்விட்டர் தலைமை மீது வழக்கு

ட்விட்டர் இந்தியாவின் மேலாண்மை இயக்குநர் மணிஷ் மகேஸ்வரி மீதும், ஏதிஸ்ட் ரிபப்ளிக் என்ற அமைப்பின் மீதும் மதவெறுப்பைத் தூண்டுவதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏதிஸ்ட் ரிபப்ளிக் என்ற அமைப்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 2011 ஜூலையிலிருந்து மத வெறுப்பைத் தூண்டும் விதமான பதிவுகளைப் பரப்பி வருவதாகவும், சமீபத்தில் இந்துகடவுளான காளியைத் தவறாகச்சித்தரித்துள்ளதாகவும் வழக்கறிஞர் ஆதித்ய சிங் டெல்லி போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் ஏதிஸ்ட் ரிபப்ளிக் அமைப்பின் நிறுவனர் அர்மின் நவாபி, சிஇஓ சூசன்னா மசிந்த்ரேயி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற மதவெறுப்பைத் தூண்டும் பதிவுகளை நீக்காமல் அவற்றுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாக ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மணிஷ் மகேஸ்வரி, பப்ளிக் பாலிசி மேனேஜர் ஷகுப்தா கம்ரன் ஆகியோரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ஆதித்ய சிங் தனதுபுகாரில் கூறியிருப்பதாவது:

ஏதிஸ்ட் ரிபப்ளிக் அமைப்பின் பதிவுகள் மக்களிடையே மத வெறுப்பு, எரிச்சல், பகையுணர்வு, அவமதிப்பு போன்ற மோசமான உணர்வுகளைத் தூண்டுவதாக உள்ளன.

இவை இந்து மதத்தையும், மக்களின் மத நம்பிக்கையையும் புண்படுத்தவும், அவமதிப்புக்குள்ளாக்கவும் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்றன. ஏதிஸ்ட் ரிபப்ளிக் ட்விட்டர்பக்கம் முழுவதிலும் இதுபோன்றபதிவுகளே நிறைந்திருக்கின்றன. ஏதிஸ்ட் ரிபப்ளிக்கின் மத வெறுப்பு செயல்பாடுகளுக்கு ட்விட்டர் நிறுவனமும் ஆதரவாகச் செயல்பட்டுவருகிறது. இந்தப் பதிவுகள் மீது எந்த கண்டிப்பு நடவடிக்கையும் ட்விட்டர் எடுக்கவில்லை. எனவே இந்தப் புகாரின்அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்துக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. சமூக வலைதளங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இந்த விதிகளுக்கு ட்விட்டர் முரண்பாடான கருத்துகளை வெளியிட்டுவந்த நிலையில் தொடர்ந்து ட்விட்டர் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டுவருகின்றன. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x