Published : 05 Jul 2021 03:12 AM
Last Updated : 05 Jul 2021 03:12 AM

உத்தராகண்ட் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்பு

உத்தராகண்ட் மாநிலத்தின் 11-வது முதல்வராக புஷ்கர் சிங் தாமி நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பேபி ராணி மவுர்யா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

டேராடூன்

உத்தராகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

உத்தரகாண்ட் மாநில பாஜக முதல்வராக இருந்த திரேந்திர சிங் ராவத் கடந்த மார்ச் மாதம் மாற்றப்பட்டு புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டார். தீரத் சிங் ராவத் தற்போது பவுரி மக்களவைத் தொகுதி எம்.பி.யாக உள்ளார்.

முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில் அவர் 6 மாதங்களுக்குள் எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட வேண்டும். வரும் செப்டம்பர் மாதத்துக்குள் அவர் பதவியேற்கவேண்டும். தற்போது கங்கோத்ரி தொகுதியும், ஹால்த் வானி தொகுதியும் காலியாக உள்ளன. இவற்றில் கங்கோத்ரி தொகுதியில் தீரத் சிங் ராவத்தை நிறுத்த கட்சி மேலிடம் முடிவு செய்திருந்தது.

இடைத்தேர்தல் இல்லை

ஆனால் அடுத்த ஆண்டு உத்தராகண்ட் சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. பேரவையின் பதவிக்காலம் முடிவடைய ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில் சட்டப் பேரவை இடைத்தேர்தல் நடத்தப்படுவது இல்லை என்பது விதியாகும்.

எனவே, தீரத் சிங் ராவத்தை ராஜினாமா செய்யுமாறு கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து 2 நாட்களுக்கு முன்பு அவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக நேற்று முன்தினம் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சிறப்பு பார்வையாளராக கூட்டத்தில் பங்கேற்றார்.

கூட்டத்தில் புதிய முதல்வராக பாஜக தலைமையால் அறிவிக்கப்பட்டிருந்த புஷ்கர் சிங் தாமி சட்டப்பேரவை பாஜக கட்சித் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து நேற்றுமாநிலத்தின் 11-வது முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றுக்கொண்டார்.

அவருக்கு மாநில ஆளுநர் பேபி ராணி மவுர்யா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

அப்போது பாஜக எம்எல்ஏக்கள் சத்பால் மகராஜ், ஹரக் சிங் ராவத்,பன்சிதர் பகத், யஷ்பால் ஆர்யா, பிஷன் சிங் சுபால், சுபோத் உனியால், அர்விந்த் பாண்டே, கணேஷ்ஜோஷி. தன் சிங் ராவத், ரேகா ஆர்யா, சுவாமி யதிஷ்வரானந்த் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இவர்கள் அனைவரும் கடந்த அமைச்சரவையில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக தலைவர்கள் அதிருப்தி

இந்நிலையில் தாமி முதல்வராக பொறுப்பேற்றதில் அங்குள்ள பாஜக தலைவர்களுக்கு அதிருப்தி நிலவுவதாகத் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று காலை மாநில பாஜக மூத்த தலைவர்கள் சிலரை, தாமி சந்தித்து அவர்களை சமாதானப்படுத்தியுள்ளார். பதவியேற்பு விழா முடிந்த பின்னர்சத்பால் மகராஜ் உள்ளிட்டோரையும் அவர் சந்தித்துப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x