லட்சத்தீவுக்கு செல்ல காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு தடை

லட்சத்தீவுக்கு செல்ல காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு தடை
Updated on
1 min read

யூனியன் பிரதேசமான லட்சத் தீவில் சுமார் 66,000 பேர் வசிக்கின்றனர். அவர்களில் 95 சதவீதம் பேர் முஸ்லிம்கள். மத்திய அரசின் சார்பில் லட்சத் தீவின் தலைமை நிர்வாக அதிகாரியாக பிரபுல் கோடா படேல் கடந்த ஜனவரியில் நியமிக்கப்பட்டார்.

பசு வதை தடுப்பு சட்டம், கடலோர பாதுகாப்பு சட்டம், சமூக விரோத தடுப்பு சட்டம் ஆகியவற்றை புதிய தலைமை நிர்வாக அதிகாரி பிரபுல் கோடா படேல் கண்டிப்புடன் அமல்படுத்தி வருகிறார். பள்ளி உணவகங்களில் கோழி, மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை உட்பட அவர் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த பின்னணியில், கேரள காங்கிரஸ் எம்.பி.க்கள் ஹைபி ஈடன், டி.என்.பிரதாபன் மற்றும் காங்கிரஸ் மீனவரணி சட்ட ஆலோசகர் சி.ஆர். ராகேஷ் சர்மா ஆகியோர் லட்சத்தீவுக்கு செல்ல அனுமதி கோரி விண்ணப்பித்தனர். லட்சத் தீவு தலைநகர் கவராத்தி மாவட்ட ஆட்சியர் அஸ்கர் அலி, காங்கிரஸ் எம்.பி.க்களின் பயணத்துக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்.

இதுகுறித்து ஆட்சியர் அஸ்கர்அலி வெளியிட்ட அறிவிப்பில்,‘‘லட்சத் தீவு மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளபயணம் மேற்கொள்ள விரும்புவதாக எம்.பி.க்கள் கூறியுள்ளனர். ஆனால் அவர்களின் பயணம்அரசியல் உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது. அவர்களால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று தெரிகிறது. எனவே அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in