ஜேஎன்யூ விவகாரத்தில் புதிய சர்ச்சை: கண்ணய்யாவுக்கு எதிராக வெளியானவை போலி வீடியோக்கள்?

ஜேஎன்யூ விவகாரத்தில் புதிய சர்ச்சை: கண்ணய்யாவுக்கு எதிராக வெளியானவை போலி வீடியோக்கள்?
Updated on
2 min read

ஜேஎன்யூ மாணவர் தலைவர் கண்ணய்யா குமார், தேசத்துக்கு எதிராக பேசுவது போல் உள்ள வீடியோக்கள் ஜோடிக்கப்பட்டவை என்று தகவல்கள் வெளியானதால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கோஷமிடுவது போன்று வெளியான வீடியோக்கள் போலியானவை என்று கூறப்படுகிறது. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யூ) கடந்த 9-ம் தேதி மாணவர்கள் கருத்தரங்கு நடத்தினர். அப்போது, நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு ஆதரவாகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் மாணவர்கள் கோஷமிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக மாணவர் சங்க தலைவர் கண்ணய்யா குமார் உட்பட 7 பேர் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர்.

இந்த நடவடிக்கைக்கு, நாடு முழுவதும் எதிர்ப்பும் ஆதரவும் பலதரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக கண்ணய்யா கோஷமிடுவது போன்ற வீடியோக்கள் வெளியாகின. மேலும், அவரை தேச துரோகி என்று குற்றம் சாட்டி பல சேனல்கள் கடுமையாக விமர்சித்தன.

இந்த விவகாரத்தால் பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கண்ணய்யா பேசுவது போல் உள்ள வீடியோக்கள் ஜோடிக்கப்பட்டவை என்றும், கண்ணய்யா பேச்சில் 'விடுதலை' என்ற ஒரு வார்த்தையை மட்டும் எடுத்துக் கொண்டு இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை வேண்டுமென்றே சேர்த்து வெளியிட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

அந்த வீடியோக்கள் உண்மையா பொய்யா என்பதை உறுதி செய்யாமலே பல சேனல்கள் எப்படி ஒளிபரப்பின என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுகுறித்து இந்திய செய்தி ஒளிபரப்பு ஆணைய தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி கே.டி.ரவீந்திரன் கூறுகையில், "தற்போது வரை கண்ணய்யா தொடர்பான 4 வீடியோக்கள் வெளியாகி உள்ளன. ஆணைய உறுப்பினர்கள் அந்த வீடியோக்களை ஆய்வு செய்து தேவைப்பட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மேலும், கடந்த 11-ம் தேதி ஜேஎன்யூ மாணவர்கள் மீது டெல்லி போலீஸார் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்தனர். அதில் கண்ணய்யா பெயர் இடம்பெறவில்லை. ஆனால், 10-ம் தேதி 'ஜி நியூஸ்' ஒளிபரப்பிய வீடியோவில் இந்தியாவுக்கு எதிராக மாணவர்கள் கோஷமிட்ட காட்சிகள் இருப்பதாக எப்ஐஆரில் போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி போலீஸார் அனுப்பிய அறிக்கையில், "ஜனநாயக மாணவர் முன்னணி, அகில இந்திய மாணவர்கள் சம்மேளனம் (இதில்தான் கண்ணய்யா உறுப்பினராக இருக்கிறார்), இந்திய மாணவர்கள் சம்மேளனம், அகில இந்திய மாணவர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரம் கழிந்த நிலையில் 17-ம் தேதி பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தனது ஐபாட்டில் ஒரு வீடியோவை காண்பித்தார். அதை இன்னொரு சேனல் ஒளிபரப்பியது. அதில் ஜேஎன்யூ வளாகத்தில் இந்தியாவுக்கு எதிராக மாணவர்கள் கோஷமிடும் காட்சிகள் இடம்பெற்றன. இதுவே கண்ணய்யாவுக்கு எதிரான ஆதாரமாக அவர் குறிப்பிட்டார். அதன்பிறகு ஓரிரு வீடியோக்களை மற்ற சேனல்கள் ஒளிபரப்பின.

இந்நிலையில், அந்த வீடியோக்கள் கண்ணய்யாவுக்கு எதிராக ஜோடிக்கப்பட்டவை என்று கூறப்படுவதால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in