

பெங்களூருவில் தான்சானியா வைச் சேர்ந்த கல்லூரி மாணவியை நிர்வாணப்படுத்தி தாக்கிய 5 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு வில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சூடானைச் சேர்ந்த முகமது அஹாத் இஸ்மாயில் (21) என்ற கல்லூரி மாணவர் வேகமாக கார் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது. இதில் சோழதேவனஹள்ளியை சேர்ந்த சஃபானா தாஜ் (35) என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். படுகாயமடைந்த 2 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் முகமது அஹாத் இஸ்மாயிலை தாக்கி, அவரது காரை யும் தீயிட்டு கொளுத்தினர். அப் போது அந்த வழியாக சென்ற அனைத்து ஆப்பிரிக்க மாணவர் கள் மீது உள்ளூர் கும்பல் கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தி யது. இதில் 10-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்கர்கள் தாக்கப்பட்டனர்.
அப்போது அங்கு வந்த தான்சானியாவைச் சேர்ந்த மாணவியை தாக்கிய கும்பல். அவரது அரை நிர்வாண கோலத்தில் ஊரை சுற்றி ஊர்வலமாக கொண்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த போலீஸாரும் வேடிக்கை பார்த் துள்ளனர். அம்மாணவிக்கு உதவ முயன்ற இளைஞருக்கும் அடி விழுந்தது.
ஒரு வழியாக கும்பலிடம் இருந்து தப்பிய அம்மாணவி, ஹெசரகட்டா காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளார். ஆனால் போலீஸார் கல்லூரி மாணவியின் புகாரை ஏற்கவில்லை. இதை யடுத்து ஆப்பிரிக்க மாணவர்கள் தான்சானியா வெளியுறவு தூதரகத்தில் உதவி கோரினார். அதன்பின் கர்நாடக டிஜிபி ஓம் பிரகாஸ் மாணவி தாக்கப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யு மாறு ஹெசரகட்டா போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் தான் சானியா மாணவியைத் தாக்கிய சோழதேவனஹள்ளியைச் சேர்ந்த பானுபிரகாஷ், பங்காரு கணேஷ், ரெஹமத், லோகேஷ், மஞ்சுநாத் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதை கண்டித்து உள்ளூர் வாசிகள் பேரணி நடத்தினர். பின்னர் போலீஸாரின் எச்சரிக் கையை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில் பெங்களூருவில் ஆப்பிரிக்க மாணவர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,'' பெங்களூருவில் ஆப்பிரிக்கர்கள் மீது கொலை வெறி தாக்குதல் தொடர்வது மிகுந்த கண்டனத்துக் குரியது. இந்திய அரசும், போலீஸா ரும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்கர்களை சட்ட விரோதமாக மிரட்டுவதிலும், ஒடுக்குவதிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப் பட்டவர்கள் மீது இனவெறி தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும். பெங்க ளூருவில் உள்ள 12 ஆயிரம் ஆப் பிரிக்க மாணவர்களுக்கும் கல்லூரி யிலும், தங்கும் இடங்களிலும் பலத்த பாதுகாப்பு வழங்க வேண் டும். ஆப்பிரிக்கர்களுக்கு தேவை யான சட்ட உதவியையும் அரசும், காவல் துறையும் செய்ய வேண்டும்'' என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பெங்களூரு வில் ஆப்பிரிக்க மாணவர்கள் அதிக அளவில் வசிக்கும் கம்மன ஹள்ளி, கொத்தனூர், பைரதி, கிருஷ்ணராஜபுரம் ஆகிய இடங் களில் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.
விளக்கம் அளிக்க உத்தரவு
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், “பெங்களூருவில் தான்சானியா மாணவி தாக்கப்பட்டது மிகுந்த வேதனையளிக்கிறது. இந்த விவ காரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கர்நாடக முதல்வர் சித்த ராமையா உறுதி அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இரு வாரங்களுக்குள் கர்நாடக அரசு விரிவான அறிக்கை அளிக்க வேண்டும்''என கூறியுள்ளார்.
தான்சானியா நாட்டு தூதரகம் கூறுகையில், ''இத்தகைய விரும்பத் தகாத சம்பவங் கள் ஆப்பிரிக்கர்களுக்கு இந்தியா மீதான அச்சத்தை அதிகரிக்கிறது. இதுகுறித்து கர்நாடக அரசு விரி வான விசாரணை நடத்தி, குற்ற வாளிகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும். இந்த சம்பவம் பற்றி கர்நாடக அரசு விரிவான அறிக்கையும், எடுக்கப்பட்ட நட வடிக்கைகள் குறித்து விளக்கமும் அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவி உட்பட அனைவருக்கும் உரிய பாதுகாப்பையும், நிவாரணத் தொகையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும். இந்தியர்களுக்கும், தான்சானியர்களுக்கும் உறவை மேம்படுத்தும் வகையில் கர்நாடக அரசும், தூதரக அதிகாரிகளும் இணைந்து நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்'' என கோரி யுள்ளது.
இதனிடையே பாஜக, பெங்க ளூருவில் தான்சானியா மாணவி தாக்கப்பட்டது நாட்டுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால் அக்கட்சியும் ராகுல் காந்தியும் மவுனமாக காக்கிறார் கள். இந்த விஷயத்தை ராகுல் பேச மறுப்பது ஏன்?''என கேள்வி எழுப்பியது. இதைத் தொடர்ந்து ராகுல், தான்சானியா மாணவி தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இனவெறி தாக்குதல் அல்ல
இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர்,'' தான்சானியா மாணவி தாக்கப்பட்டது மிகவும் கொடுமை யானது. அவர் மீது நடத்தப்பட்டது இனவெறித் தாக்குதல் அல்ல. சம்பவத்தன்று நடந்த விபத்தை தொடர்ந்து நடந்த எதிர்வினை யாகும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கு மாறு காவல் துறைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது''என்றார்.
ஐந்து பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து உள்ளூர்வாசிகள் பேரணி நடத்தினர். பின்னர் போலீஸாரின் எச்சரிக்கையை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.