

சில்லறை மற்றும் மொத்த வணிகத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுக்குள் கொண்டு வந்தது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவு என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் இத்துறையைச் சேர்ந்தவர்கள் முன்னுரிமை கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமடைந்துள்ளது என்றும் இத்தகைய சமூகத்தினரை மேம்படுத்த இந்த அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வெள்ளிக்கிழமை சில்லரை மற்றும் மொத்த விற்பனை வணிகமும் சிறு, குறு மற்றும் நடுத்தர (எம்எஸ்எம்இ) தொழில் பிரிவுக்குள் இணைக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இதன் மூலம் ரிசர்வ் வங்கி அறிவிக்கும் முதன்மைத் துறைக்கான கடன் வாய்ப்புகளை இத்துறையைச் சேர்ந்தவர்களும் பெற வழியேற்படும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மத்திய அரசு சில்லறை வர்த்த்தகம் மற்றும் மொத்த விற்பனை துறையை சிறு, குறுமற்றும் நடுத்தர தொழில் பிரிவினருடன் இணைத்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
சில்லறை வர்த்தகம் மற்றும் மொத்த வர்த்தகம் ஆகிய இரண்டையும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவினருடன் இணைத்ததன் மூலம் ரூ. 250 கோடி அளவுக்கு வர்த்தகம் புரிவோர் உடனடி கடன் பெற வழியேற்பட்டுள்ளது. இப்பிரிவினர் ஆத்மநிர்பாரத் திட்டத்தின் மூலம்கடன் பெறமுடியும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அரசின் இந்த அறிவிப்பின் மூலம் கட்டமைப்பு ரீதியாக பல தாக்கங்கள் இத்துறையில் ஏற்படும். இருப்பினும் வர்த்தகம் புரிய எளிய கடனுதவி வசதிகள்இத்துறைக்குக் கிடைக்க வழியேற்பட்டுள்ளது என்று இத்துறை வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சில்லறை மற்றும் மொத்த வணிகத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுக்குள் கொண்டு வந்தது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவு என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். - பிடிஐ