Last Updated : 04 Jul, 2021 03:12 AM

 

Published : 04 Jul 2021 03:12 AM
Last Updated : 04 Jul 2021 03:12 AM

மேகேதாட்டு திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் ரூ.9 ஆயிரம் கோடிசெலவில் புதிய அணை கட்டகர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த மனு விசாரணையில் உள்ள நிலையில் கர்நாடக அரசுஅணை கட்ட அனுமதி கோரி மத்திய நீர்வளம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரியுள்ளது.

க‌டந்த 17-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து, ‘கர்நாடக அரசின் மேகேதாட்டு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது' என வலியுறுத்தினார். கடந்த வாரம் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும் தமிழக அரசு மேகேதாட்டு அணைக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இரு பக்க‌ கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

400 மெகாவாட் மின்சாரம், 4.75 டிஎம்சி குடிநீர் தேவைக்காகவே கர்நாடக அரசு மேகேதாட்டு கூட்டு குடிநீர் மற்றும் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவைக்காகவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை வழங்குவதில் எவ்வித தடங்கலும் ஏற்படாது. காவிரி நீரை நம்பியுள்ள தமிழக விவசாயிகளுக்கு இந்த திட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இத் திட்டம் இரு மாநில மக்களுக்கும் நலனையே பயக்கும். ஆனால் தமிழக அரசு இந்த திட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. கர்நாடக அரசு அதை எதிர் கொண்டு வரும் நிலையில், இந்த திட்டத்துக்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் திட்ட வரைவு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அதே வேளையில் தமிழக அரசு காவிரி படுகையில் குந்தா, சில்லஹள்ளி ஆகிய இடங்களில் மின்சாரம் தயாரிப்பதற்காக இரு நீர் மின் திட்டங்களை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளது. குந்தா நீர் மின் திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் கடந்த 12.2.2021 அன்று ஏற்றுக்கொண்டுள்ளது. சில்லஹள்ளி நீர் மின் திட்டமானது நிபுணர் குழுவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இதுதவிர தமிழகஅரசு மேட்டூர் அணையை சுற்றியுள்ள பகுதிகளிலும், இதர காவிரிபடுகை பகுதிகளிலும் மேலும் சிலதிட்டங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் நான் கர்நாடகாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே நல்ல‌ உறவை மேம்படுத்த விரும்புகிறேன். இதை தமிழக அரசு நல்ல முறையில் பரிசீலித்து, மேகேதாட்டு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க வேண்டும். இந்த விவகாரங்களுக்கு தீர்வுகாணும் வகையில் இருமாநில அதிகாரிகளையும் உள்ளடக்கி பேச்சுவார்த்தை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு எடியூரப்பா கடிதத் தில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x