காஷ்மீரில் மீண்டும் என்கவுன்ட்டர்: 5 லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் 5-வது முறையாக நேற்று ஒரு என்கவுன்ட்டர் நடந்தது. தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை நேற்று பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர். இருதரப்புக்கும் இடையில் நீண்ட நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் 5 தீவிரவாதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதில் இந்திய ராணுவ வீரர் ஒருவரும் வீரமரணம் அடைந்தார். இறந்த தீவிரவாதிகள் அனைவரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இறந்த தீவிரவாதிகள் நிஷாஸ் அகமது லோன், டேனிஷ் மன்சூர், அணிர் வகாய், மெஹ்ரான் மன்சூர், அபு ரெஹான் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் அகமது லோன், லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கமாண்டராக பணிபுரிந்தவர் எனத் தெரிகிறது.
இதுகுறித்து காஷ்மீர் போலீஸ் ஐஜி விஜய்குமார் கூறும்போது, “தீவிரவாதிகளுக்கு எதிரான இந்த ஆபரேஷன் மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்திய ராணுவத் தரப்பில் உயிரிழந்த ஜவான் காசி ராவ் எனத் தெரியவந்துள்ளது. காயமடைந்த நிலையில் அவர் ஹெலிகாப்டரில் அழைத்து வரப்பட்டார். நகர் ராணுவ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்" என்றார். -பிடிஐ
