

மேற்குவங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் கரோனா தடுப்பூசியை செலுத்திய விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் அசன்சாலில் கரோனா தடுப்பூசி முகாம் ஒருங்கிணைக்கப்பட்டது. முகாமில் பங்கேற்ற திரிணமூல் காங்கிரஸ் கவுன்சிலர் தபசும் ஆரா முதலில் நர்ஸ் ஒருவரிடமிருந்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்கிறார். பின்னர், முகாமுக்கு வந்து இன்னொரு பெண்ணுக்கு அவரே தடுப்பூசியை செலுத்துகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
ஆனால், சம்பந்தப்பட்ட கவுன்சிலரோ நான் தடுப்பூசி செலுத்தவில்லை. கையில் ஊசியை வைத்திருந்தேன். முகாமுக்கு வந்த பலரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டியதாலேயே நான் அவ்வாறு ஊசியுடன் போஸ் கொடுத்தேன். மேலும் நான் பள்ளியில் நர்ஸிங் பாடம் பயின்றேன் எனக் கூறியுள்ளார்.
ஆனால், பாஜக இந்த சர்ச்சையைக் கையில் எடுத்துள்ளது. பாஜக எம்.பி. பாபுல் சுப்ரியோ இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு அதன் நிர்வாகிகள் மீது ஏதேனும் கட்டுப்பாடு இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒரு கவுன்சிலர் கரோனா தடுப்பூசி போடுகிறார். அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா இல்லை கடுமையான தண்டனையைத் தருமா" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் அசன்சால் தொகுதி எம்எல்ஏ.,வும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "திரிணமூல் காங்கிரஸ் மக்கள் உயிருடன் விளையாடியிருக்கிறது. மருத்துவர்களும், செவிலியர்களும் தடுப்பூசி முகாமில் இருந்தபோதும் கவுன்சிலர் ஒருவர் பெண்ணுக்கு தடுப்பூசி வழங்கியிருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.