

விரைவில் இந்தியாவில் இடைக்கால குறைதீர் அதிகாரி நியமிக்கப்படுவார் என்று உயர் நீதிமன்றத்தில் ட்விட்டர் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தைக் கொண்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் விதிமுறைகளுக்கு ட்விட்டர் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் புதிய விதிகளின் படி இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி கெடு வழங்கியது.
இதனைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் பெற்றுள்ள சட்டபாதுகாப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
பலகட்ட சர்ச்சைகளுக்குப் பிறகு, மத்திய அரசின் புதிய விதிகளுக்கு இணங்கி,ட்விட்டர் நிறுவனம் தர்மேந்திர சாதுர் என்பவரை, இந்திய அளவிலான குறைதீர்ப்பு அதிகாரியை நியமித்தது. ஆனால், நியமனம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே திடீரென ராஜினாமா செய்தார்.
இதற்கிடையில், ட்விட்டர் நிறுவனம் மீது இந்தியாவைச் சேர்ந்த பயனாளர் ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இன்று ட்விட்டர் நிறுவனம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், இந்தியாவுக்காகவே பிரத்யேகமாக குறைதீர் அதிகாரி ஒருவர் இடைக்கால ஏற்பாடாக விரைவில் நியமிக்கப்படுவார். உரிய நபரை நியமிப்பதில் இறுதிக் கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். ஆகையால், மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுகிறோம். இந்த பிரமாணப் பத்திரத்தில் இந்தியாவுக்கான இடைக்கால குறைதீர் அதிகாரி குறித்த விவரங்கள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே, புதிய ஐடி விதிகளின்படி ட்விட்டர் நிறுவனம், தனது சர்வதேச சட்டக் கொள்கை இயக்குநர் ஜெரமி கெஸ்ஸலை இந்தியாவுக்கான குறைதீர் அதிகாரியாக தற்காலிக ஏற்பாடாக வைத்திருக்கிறது.
முன்னதாக, இன்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்தியாவின் 'கூ' சமூகவலைதளத்தைப் பாராட்டினார். அந்த வலைதளத்தில், அவதூறான கருத்துகள் உடனுக்குடன் நீக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.