ராகுல் காந்தி பகடைக்காய்; ரஃபேல் விவகாரத்தில் பொய்களையும், தவறான கருத்தையும் காங்கிரஸ் பரப்புகிறது: பாஜக பதிலடி

பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா பேட்டி அளித்த காட்சி | படம்: ஏஎன்ஐ.
பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா பேட்டி அளித்த காட்சி | படம்: ஏஎன்ஐ.
Updated on
2 min read

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் போட்டி நிறுவனங்களின் பகடைக்காயாக ராகுல் காந்தி பயன்படுத்தப்படுகிறார். தவறான கருத்துகளையும், பொய்களையும் ராகுல் காந்தியும், காங்கிரஸும் பரப்புகிறார்கள் என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு கொள்முதல் செய்தது. இந்த விமானக் கொள்முதல் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுகுறித்து விசாரிக்க பிரான்ஸ் அரசு நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்துள்ளது.

இந்த விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் கட்சி, ரஃபேல் போர் விமானக் கொள்முதல் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

''ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் ஊழல் நடந்ததாக என்ஜிஓ அளித்த புகாரையடுத்து, நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் கொள்முதல் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக எடுக்கக் கூடாது.

ஆனால், ரஃபேல் விமானக் கொள்முதல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் பொய்களையும், தவறான கருத்துகளையும் பரப்புகிறார்கள். தவறான கருத்துகளுக்கும், பொய்களுக்கும் உதாரணமாக காங்கிரஸ் மாறியிருக்கிறது.

ராகுல் காந்தி செயல்படும் போக்கைப் பற்றி பெரிதாக ஏதும் சொல்ல முடியாது. பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்துக்குப் போட்டி நிறுவனங்களின் பகடைக் காயாக ராகுல் காந்தி செயல்படுகிறார். ரஃபேல் கொள்முதல் விவகாரத்தில் தொடக்கத்திலிருந்தே ராகுல் காந்தி பொய்களைக் கூறி வருகிறார்.

போட்டி நிறுவனங்களின் ஏஜெண்ட் போலவும், ராகுல் காந்தியின் குடும்பத்தின் சிலர் அந்த நிறுவனத்தின் உறுப்பினர்கள் போலவும் தொடக்கத்திலிருந்து செயல்படுகிறார்கள்.

மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலும் ரஃபேல் விமானக் கொள்முதலில் இந்தியா, பிரான்ஸ் அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தெரிவித்த குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

மக்களவைத் தேர்தலின்போது இதுபோன்ற குற்றச்சாட்டையும், பிரதமர் மோடிக்கு எதிரான குற்றச்சாட்டையும் காங்கிரஸ் கூறியது. ஆனால், மக்கள் மகத்தான வெற்றியை 2019ஆம் ஆண்டு தேர்தலில் வழங்கினர்.

ராகுல் காந்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் நாட்டை பலவீனப்படுத்த முயன்று வருகிறார். பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலன்டே, அதிபர் மெக்ரான் ஆகியோர் மீதும் ராகுல் காந்தி குற்றச்சாட்டு கூறினார். ஆனால், இரு அதிபர்களும் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை மறுத்தனர்.

ரஃபேல் விமானக் கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு பேசியதற்காக உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பும் கோரினார்.

ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் ராகுல் காந்தி குடும்பத்தார் எந்தவிதமான கமிஷனும் பெறவில்லை. அதனால்தான் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது. பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் அரசு நிலையற்ற தன்மையோடு இருப்பதால், கவனத்தை திசை திருப்புகிறது''.

இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in