Published : 03 Jul 2021 03:30 PM
Last Updated : 03 Jul 2021 03:30 PM

சட்டவிரோத பண பரிமாற்றம்; அனில் தேஷ்முக் நாளை மறுதினம் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

சட்டவிரோத பண பரிமாற்ற மோசடி வழக்கில் மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அனில் தேஷ்முக் ஜூலை 5ம் தேதி ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

மும்பையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா வீட்டுக்கு அருகே வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. உதவி காவல் ஆய்வாளர் சச்சின் வாஸ் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். மும்பை காவல் ஆணையர் பரம் வீர் சிங் ஊர்க்காவல் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

பரம் வீர் சிங் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதத்தில் “மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், உதவி காவல் ஆய்வாளர் சச்சின் வாஸ் உள்ளிட்ட காவலர்களிடம் மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டார்’’ என தெரிவித்து இருந்தார்.

இந்த விவகாரம் மகாராஷ்டிர அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து அனில் தேஷ்முக் விலகினார். அனில் தேஷ்முக் மீது பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணைதொடர்பாக மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள அனில் தேஷ்முக் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த பண மோசடி வழக்கில் அனில் தேஷ்முக்கின் தனி செயலர் சஞ்சீவ் பாலாண்டே மற்றும் தனி உதவியாளர்குந்தன் ஷிண்டே ஆகியோரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். பண மோசடி வழக்கில் அனில் தேஷ்முக்கை நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பினர். அவர் ஆஜராகததை தொடர்ந்து 2-வது முறையாகவும் சம்மன் அனுப்பினர். ஆனால் உடல்நிலையை காரணம் காட்டி அவர் ஆஜராகவில்லை.

இந்த நி்லையில் அமலாக்கத்துறை 3-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. அதில் ஜூலை 5-ம் தேதிக்குள் மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x