Last Updated : 03 Jul, 2021 03:25 PM

 

Published : 03 Jul 2021 03:25 PM
Last Updated : 03 Jul 2021 03:25 PM

ஐந்து நாட்களுக்குப் பின் வரவும்; மாதவிடாய் இருக்கும் பெண்களைத் திருப்பி அனுப்பிய கர்நாடக தடுப்பூசி மையங்கள்

கர்நாடகாவில் ஒரு சில மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சில தடுப்பூசி மையங்கள் மாதவிடாய் இருக்கும் பெண்களுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்த மறுத்தது சர்ச்சையாகி உள்ளது.

ராய்ச்சூர், பெலகாவி, பிதார் மாவட்டங்களில்தான் இந்தப் பிரச்சினை இருப்பதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சில தடுப்பூசி மையங்களுக்கு வந்த பெண்களிடம் மாதவிடாய் இருக்கிறதா என விசாரிக்கப்பட்டுள்ளது. ஆம் என்று சொன்ன பெண்களிடம் 5 நாட்களுக்குப் பின் வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசியை மாதவிடாயின்போது போட்டுக் கொண்டால் மயக்கம், அதீத ரத்தப்போக்கு ஏற்படலாம் என்று வெளியான சில தகவல்களின் அடிப்படையில் இவ்வாறு கெடுபிடி காட்டப்பட்டுள்ளது தெரிகிறது.

ஆனால், அரசுத் தரப்பில் இப்படி எந்த ஒரு கெடுபிடியும் விதிக்கப்படவில்லை. அனைத்துப் பெண்களுக்குமே தடுப்பூசி வழங்கப்படுகிறது என ராய்ச்சூர் துணை கமிஷனர் ஆர்.வெங்கடேஷ் குமார் கூறியிருக்கிறார்.

இந்திய மகப்பேறியல் சமூகங்களின் கூட்டமைப்பு (Federation of Obstetric and Gynecological Societies of India) வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘பெண்கள் மாதவிடாய் ஏற்படும் நாட்கள் உட்பட எந்த நாளில் வேண்டுமானாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.மாதவிடாயின் பொருட்டு தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தவிர்ப்பதற்கோ தாமதப்படுத்துவதற்கோ எந்த ஒரு அறிவியல் அடிப்படையும் இல்லை என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், மாதவிடாயின்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ள பெண்கள் தயக்கம் காட்டத் தேவையில்லை என்று நிதி ஆயோக்கின் உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் தெரிவித்ததும் கவனிக்கத்தக்கது.

கர்ப்பிணிகளுக்கும் கரோனா தடுப்பூசி:

முன்னதாக நேற்று மத்திய அரசு கர்ப்பிணி பெண்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்தது. நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (NTAGI) பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவை மத்திய அரசு அறிவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x