

மே.வங்க எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக எம்எல்ஏவுமான சுவேந்து அதிகாரிக்கு விலக்கப்பட்ட பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க அரசுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்த சுவேந்து அதிகாரி தேர்தலுக்கு முன்பாக அதிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார். நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி தன்னை எதிர்த்த மம்தா பானர்ஜியை தோற்கடித்தார். இதையடுத்து, மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவராக சுவேந்துஅதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுவேந்து அதிகாரிக்கும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே பனிப்போர் நீடித்து வரும் நிலையில் கடந்த மே 18-ம்தேதி சுவேந்து அதிகாரிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மே.வங்க அரசு விலக்கிக்கொண்டது. சுவேந்து அதிகாரி மத்திய அரசின் இசட் பிளஸ் பாதுகாப்புடன் இருப்பதால் அவருக்கு மாநில அரசின் பாதுகாப்பு தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தனக்கு விலக்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப வழங்கக்கோரி சுவேந்து அதிகாரி சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ தனக்கு இசட்பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டாலும், தன்னுடைய பயணத்தின் போது 3 விதங்களில் கண்காணிக்க மாநில போலீஸார் பாதுகாப்புத் தேவை. பைலட்கார், கண்காணிப்பு, பயணவழித்தடம் ஆகியவற்றில் மாநில போலீஸார் உதவி தேவை என்பதால் பாதுகாப்பு வழங்கிட உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சுவகாந்த் பிரசாந்த் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
அதில் “மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி ஏற்கெனவே மத்திய அரசின் இசட் பிளஸ் பாதுகாப்பில் இருந்தாலும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லாமல் அவர் இருக்க அவருக்கு பாதுகாப்பு வழங்குவது மாநில அரசின் பொறுப்பாகும். ஆதலால், அவருக்கு விலக்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப வழங்கிட வேண்டும்.
இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள சுவேந்து அதிகாரிக்கு மாநில அரசின் பாதுகாப்பு தேவையில்லை என்றாலும், எந்தவிதமான குற்றச்சாட்டுக்கும் மாநில அரசு ஆளாகாமல் இருக்க பாதுகாப்பு வழங்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.