கரோனாவுக்கு எதிராக 77.8 % பலன் தரும் கோவாக்சின்: 3-ம் கட்ட ஆய்வில் தகவல்
கோவாக்சின் தடுப்பூசி ஒட்டுமொத்தமாக கரோனா நோயாளிகளுக்கு 77.8 சதவீதம் பலன் அளிப்பதாக மூன்றாம் கட்டப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தற்போது 34 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டு டோஸ்கள் போட்ட பிறகு கோவிஷீல்ட், கோவாக்சின் இரண்டுமே சிறந்த பலன்களைக் கொடுப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்டா வைரஸ் மரபணு மாறி டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது. இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இதனால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டுள்ளனர். இதுகுறித்த ஆய்வும் தீவிரமடைந்து வருகிறது.
பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசி டெல்டா போன்ற மரபணு உருமாறிய கரோனா வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய சுகாதார ஆய்வு நிறுவனம் (என்ஐஎச்) அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தநிலையில் கோவாக்சின் கரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. அதில் கூறப்பட்டள்ளதாவது:
கரோனா பாதிப்புள்ள நோயாளிகளில் 19 முதல் 98 வயது கொண்டவர்களுக்கு செலுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது. 25 இடங்களில் சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி பார்க்கப்பட்டது. அதன் முடிவுகள் பெருமளவு பலன் தருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக கரோனா நோயாளிகளுக்கு 77.8 சதவீதம் பலன் அளிக்கிறது.
கரோனா தொற்று ஒரளவு கொண்ட நோயாளிகளுக்கு 78 சதவீதம் பலனளிக்கிறது.
கரோனா தொற்று தீவிர பாதிப்புள்ள நோயாளிகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி 93. 4 சதவீதம் பலன் தருகிறது.
அறிகுறி தெரியாத கரோனா நோயாளிகளுக்கு 63 சதவீதம் பலன் தந்துள்ளது.
டெல்டா வைரஸுக்கு எதிராக 65 செயல்திறன் கொண்டது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
