ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் கல்வி; நாசிக் சமுதாய வானொலிக்கு தேசிய விருது

ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் கல்வி; நாசிக் சமுதாய வானொலிக்கு தேசிய விருது
Updated on
1 min read

ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் கல்வி கற்க உதவிய நாசிக் சமுதாய வானொலிக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் நிறுவப்பட்ட தேசிய சமுதாய வானொலி விருதுகளின் எட்டாவது பதிப்பில் நாசிக்கை சேர்ந்த சமுதாய வானொலி நிலையமான ரேடியோ விஷ்வாஸ் இரண்டு விருதுகளை வென்றது.

நிலைத்தன்மை மாதிரி விருதுகள் பிரிவில் முதல் பரிசையும், மையக்கரு சார்ந்த விருதுகள் பிரிவில் இரண்டாவது பரிசையும் கோவிட்-19 காலத்தில் ஒலிபரப்பான ‘அனைவருக்கும் கல்வி’ எனும் நிகழ்ச்சிக்காக ரேடியோ விஷ்வாஸ் 90.8 விருதுப்பெற்றது.

மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள விஷ்வாஸ் தியான் பிரபோதினி & ஆராய்ச்சி நிலையத்தால் நடத்தப்படும் ரேடியோ விஷ்வாஸ் நாள்தோறும் 14 மணி நேரம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது.

2020 ஜூன் மாதம் பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட, விருது வென்ற நிகழ்ச்சியான அனைவருக்கும் கல்வி நிகழ்ச்சி, மூன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

ஜில்லா பரிஷத் மற்றும் நாசிக் நகராட்சி பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் சென்றடையும் விதத்தில் இந்தி, ஆங்கிலம், மராத்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாடங்கள் ஒலிபரப்பப்பட்டன.

வானொலியின் செயல்பாடுகள் குறித்து பேசிய நிலைய இயக்குநர் டாக்டர் ஹரி விநாயக் குல்கர்னி, நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக கூறினார். ‘‘ஸ்மார்ட் போன் வாங்க முடியாத ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு இந்நிகழ்ச்சி உதவிகரமாக இருந்தது.

எங்கள் நிலையத்திற்கு வருகை தந்து பாடங்களை பதிவு செய்த 150 ஆசிரியர்களின் உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. பாட வாரியாக நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்ட நிலையில், அனைவருக்கும் கல்வி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்து சுமார் 50,000-60,000 மாணவர்கள் பயனடைந்தனர்,” என்று அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்றின் போது சமுதாய வானொலி நிலையங்கள் தகவல் தொடர்பில் குறிப்பிடத்தக்க பங்காற்றின. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் 327 சமுதாய வானொலி நிலையங்கள் தற்சமயம் செயல்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in