

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் வேகம் என்பது நாள்தோறும் நார்வே நாட்டு மக்கள் தொகைக்கு ஈடாக அதாவது 50 லட்சம்பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது இது மாரத்தான் வேகம், 100மீட்டர் ஓட்டமல்ல என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் லாவ்அகர்வால், நிதிஆயோக்கின் மருத்துவக் குழு உறுப்பினர் வி.கே.பால் ஆகியோர் நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது லாவ் அகர்வால் கூறியதாவது:
நம் நாட்டில் ஜனவரி 16-ம் தேதி முதல் இன்றுவரை(நேற்று) 34 கோடி மக்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்க மக்கள் தொகைக்கு ஈடாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தும் வேகத்தில் நாம் மாரத்தான் ஓட்டத்தில் இருக்கிறோம், 100 மீட்டர் ஓட்டத்தில் அல்ல. நாட்டில் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் எதிர்கால உற்பத்தி குறித்து கடந்த மே 13ம்தேதி செயல்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் கோவிஷீல்ட் 75 கோடி டோஸ்கள், கோவாக்சின் 55 கோடி டோஸ்கள் தயாரிக்கப்படும்.
இது தவிர பயோலாஜிக்கல் இ தடுப்பூசி 30 கோடி டோஸ்கள், ஜைடஸ் கெடிலா 5 கோடி, நோவாவேக்ஸ் 20 கோடி டோஸ்கள், பாரத்பயோடெக்கின் தயாரிக்கும் மூக்கில் உறியும் தடுப்பு மருந்து 10 கோடி டோஸ்கள், ஜென்னோவா தடுப்பூசி 6 கோடி, ஸ்புட்னிக் வி 15.6 கோடி டோஸ்கள் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்
நிதியோக் உறுப்பினர் வி.கே.பால் கூறுகையில் “ 216 கோடி தடுப்பூசி டோஸ்களை அடுத்துவரும் மாதங்களில் எதிர்பார்க்கிறோம். மருந்து நிறுவனங்களும், தயாரிப்பாளர்களும் நேர்மறையான எண்ணத்தோடு திட்டமிட்டுள்ளார்கள். கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் மூலம் நமக்கு 90 கோடி டோஸ்கள் கிடைக்கும் என்பது உறுதி
இது தவிர ஜைடஸ் கெடிலா நிறுவனம் 5 கோடி டோஸ்களை வழங்கும் எனத் தெரிகிறது. மாடர்னா தடுப்பூசி நிறுவனத்துடனும், ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனத்துடனும் மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது. நிச்சயம் இரு நிறுவனங்களின் தடுப்பூசி கிடைக்கும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.