

இந்தியாவின் ஏற்றுமதி நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 9,500 கோடி டாலர் (சுமார் ரூ.7.12 லட்சம் கோடி) அளவை எட்டியுள்ளது. முந்தைய அளவை விட இது 16 சதவீதம் அதிகம் என மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020-21-ம் நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் அதிகபட்சமாக 9,000 கோடி டாலர்அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது அதையும் கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரம் மீண்டு வருவதை உணர்த்துவதற்கான காரணிகளில் ஒன்றாக ஏற்றுமதி அதிகரிப்பு உள்ளது. அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு பல்வேறு துறைகளில் அதிகரிக்கப்பட்டதும் ஏற்றுமதி உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். கரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள சூழலிலும் அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் ஏற்றுமதி அதிகரிப்புக்கு காரண மாகும்.
அந்நிய நேரடி முதலீடு 8,172 கோடி டாலராக கடந்த ஆண்டு இருந்துள்ளது. இதில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 62 லட்சம் டாலராகும். இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் வந்த அளவைவிட 38 சதவீதம் அதிகமாகும் என்று கோயல் குறிப்பிட்டார்.
அரிசி ஏற்றுமதி
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்த சூழலிலும் ஏற்றுமதி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்ஜினியரிங் பொருள் ஏற்றுமதி 520 கோடி டாலராகவும், அரிசி மற்றும் நறுமன உணவுப் பொருள் ஏற்றுமதி அளவு இரட்டை இலக்கத்துக்கு உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேபோல கடலுணவு பொருள் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இதனிடையே அங்கீகரிக்கப்டப்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 623 மாவட்டங்களில் 50 ஆயிரத்தை எட்டியுள்ளதாகவும் வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.