Published : 03 Jul 2021 03:11 AM
Last Updated : 03 Jul 2021 03:11 AM
'சுயசார்பு இந்தியா' திட்டத்தின்
கீழ் உள்நாட்டிலேயே தயாரிக் கப்பட்ட நவீன சிறிய ரக நடமாடும் பாலங்கள் இந்திய ராணுவத்தில் நேற்று இணைத்துக் கொள்ளப்பட்டன. இந்தப் பாலங்களால் பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவின் செயல்திறன் பல மடங்கு அதிகரிக்கும் என ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்தார்.
இந்திய எல்லைப் பகுதிகளில்உள்ள சிறிய ஆறுகள், பள்ளத்தாக்குகள், மலையடிவாரங்கள் முதலியவற்றை பீரங்கிகளும், ராணுவ வாகனங்களும் கடப்பதுமிகவும் சிரமமான ஒன்றாகும். இந்தப் பிரச்சினையை நிவர்த்திசெய்வதற்காக, சிறிய ரக பாலங்களை ராணுவம் பயன்படுத்தி வருகின்றன.
ராணுவ வாகனங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாலங்கள், தேவைப்படும் பகுதிகளில் வைக்கப்பட்டு பின்னர் எடுத்துச் செல்லப்படும். இதுபோன்ற சிறிய ரக பாலங்களை பெருமளவில் நாம் வெளிநாடுகளில் இருந்தே வாங்கி வருகிறோம்.
சுயசார்பு இந்தியா திட்டம்
இதனிடையே, இந்தப் பாலங்களை 'சுயசார்பு இந்தியா' திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக முழு வீச்சில் நடைபெற்று வந்தன. அதன்படி, டிஆர்டிஓ மற்றும் எல் அண்ட் டி நிறுவனங்கள் இணைந்து தயாரித்த 10 மீட்டர் நீளமுள்ள சிறிய பாலங்கள் இந்திய ராணுவத்தில் நேற்று இணைத்துக் கொள்ளப்பட்டன. முதல்கட்டமாக 12 பாலங்கள் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.492 கோடி ஆகும்.
இந்தப் பாலங்களை ராணுவத்தில் இணைக்கும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவானே பேசும்போது, “இந்திய ராணுவத்திடம் 15 மீட்டர் நீளமுள்ள சிறிய ரக பாலங்கள் ஏராளமாக இருக்கின்றன. எனினும், 10 மீட்டர்பாலங்களின் தேவை அதிகமாக இருந்தது. தற்போது இந்தப்பாலங்கள் ராணுவத்தில் இணைக்கப்பட்டிருப்பதால் பாகிஸ்தானை ஒட்டிய எல்லைப் பகுதியில் நமது செயல்திறன் பல மடங்கு அதிகரிக்கும். அதிலும் அவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு. வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் மேலும் 30 சிறிய ரக பாலங்கள் இந்திய ராணுவத்தில் இணைக்கப்படும்” என்றார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT