Published : 03 Jul 2021 03:11 AM
Last Updated : 03 Jul 2021 03:11 AM

மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு; அஜித் பவாரின் ரூ.65 கோடி சொத்து முடக்கம்: அந்நியச் செலாவணி சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை நடவடிக்கை

மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் (என்சிபி) தலைவருமான அஜித் பவாரின் ரூ.65 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கியில் நிகழ்ந்த ரூ.25 ஆயிரம் கோடி மோசடியில் இவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி அவரது சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. அந்நியச் செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் அவரது சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முடக்கப்பட்ட சொத்துகளில் நிலம், கட்டிடம், இயந்திரங்கள் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் குரு கமாடிடி சர்வீசஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானவை. இந்நிறுவன இயந்திரங்கள் சர்க்கரை ஆலைகளுக்குகுத்தகைக்கு வழங்கப்படுபவை யாகும். இந்நிறுவனம் ஜரந்தேஸ்வர் சாகரி சர்க்கரை கர்கானா (எஸ்எஸ்கே) ஆலைக்கு இயந்திரங்களை குத்தகைக்கு அளித்துள்ளது. இந்த சர்க்கரை ஆலை மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ளது. இந்த ஆலையில் ஸ்பார்க்ளிங் மண் பரிசோதனை நிறுவனம் முக்கிய பங்குதாரராக உள்ளது. இந்த நிறுவனம் அஜித் பவாருக்கு மிகவும் நெருக்கமானதாகும்.

ஸ்பார்க்ளிங் மண் பரிசோதனை நிறுவனம் ஜரந்தேஸ்வர் சர்க்கரை ஆலையில் மிக அதிக அளவிலான பங்குகளைக் கொண்டிருந்தது. இதில் அஜித் பவார் மற்றும் அவரது மனைவி சுநித்ரா பவார் ஆகியோருக்கு அதிக பங்கு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 2010-ல் மொத்தம் ரூ.65.75 கோடிக்கு சொத்துகள் வாங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மகாராஷ்டிரத்தை ஆளும் சிவசேனா, என்சிபி மற்றும் காங்கிரஸ் இடையே உறவு ஸ்திரமற்ற நிலையில் இருந்தபோது அமலாக்கத் துறை விசாரணை நடவடிக்கையை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் நானோ படேல், இனி வரும் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இதனால் சிவசேனா, பாஜக இடையே மீண்டும் உறவு ஏற்படும் எனத் தெரிகிறது.

மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக 2019-ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அமலாக்கத் துறை அஜித் பவார் மற்றும் 75 பேர் மீது வழக்கு பதிவு செய்தது.

இந்த கூட்டுறவு வங்கியானதுதேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர்கள் பலரால் நிர்வகிக்கப் பட்டது தெரியவந்துள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x