Published : 03 Jul 2021 03:12 AM
Last Updated : 03 Jul 2021 03:12 AM

மார்க்கண்டேய நதியில் கர்நாடகா கட்டிய புதிய அணை: தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சி

இரா.வினோத் / எஸ்.கே.ரமேஷ்

கர்நாடக மாநிலம் சிக்கப்பள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் உற்பத்தியாகும் தென் பெண்ணை ஆறு கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை கடந்து வங்கக் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் முக்கிய துணை நதியான மார்க்கண்டேய நதி கர்நாடக எல்லையான‌ முத்தியால்மடுகுவில் உற்பத்தியாகி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நுழைகிறது. இந்த ஆற்றின்நீரால் வேப்பனப்பள்ளி, பாலனப்பள்ளி, திப்பனப்பள்ளி பகுதிகளை சுற்றியுள்ள நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.

இந்நிலையில், கர்நாடக அரசு 2010-ம் ஆண்டு யார்கோல் எனும் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் முக்கிய துணை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்ட முடிவெடுத்தது. இதற்கு மத்திய நீர்வளம் மற்றும் சுற்றுச்சூழல்த் துறை அனுமதி வழங்கியதை தொடர்ந்து மார்க்கண்டேய நதியின் குறுக்கே யார்கோல் அருகே ரூ.87.18 கோடி செலவில் அணை கட்டும் பணியில் இறங்கியது.

இதை எதிர்த்து தமிழக அரசு 2013-‍ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், ''தென்பெண்ணை ஆற்று நீரைக் கொண்டு தமிழகத்தில் சுமார் 10 லட்சம் ஏக்கர் அளவில் பாசனமும், 5 மாவட்ட குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த ஆறு கர்நாடகாவை விட, தமிழகத்திலே அதிக நீளம் பாய்வதால் புதிதாக அணை கட்டக் கூடாது. சுமார் 50 மீட்டர் உயரத்தில் கட்டப்படும் அணையால் தென் பெண்ணை ஆற்றின் நீர்ப்போக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது''என வாதிட்டது. இதை ஏற்க மறுத்த நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு, ‘‘மார்க்கண்டேய நதியில் அணை கட்ட கர்நாடகாவுக்கு தடையில்லை'' எனக்கூறி, தமிழக அரசு மனுவை தள்ளுபடி செய்த‌து.

இதையடுத்து கர்நாடக அரசு பங்காரு பேட்டையை சுற்றியுள்ள 45 கிராமங்களின் குடிநீர் தேவைக்காக 40 மீட்டர் உயரம், 414 மீட்டர்நீளத்தில் அணையை கட்டி முடித்துள்ளது. இந்த புதிய அணையால்கிருஷ்ணகிரியில் படேதலாவ் ஏரிக்கும், கே.ஆர்.பி.அணைக்கும் நீர்வரத்து குறையும். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. தவிர தென்பெண்ணை ஆற்றினால் பயனடையும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணா மலை, விழுப்புரம், கடலூர் ஆகிய5 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த அணையால் தென் பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம், தென் பெண்ணை ஆற்று குடிநீர் திட்டங்களும் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x