

மூன்றில் ஒரு மாணவர் மேல்நிலை வகுப்பைத் தொடர்வது இல்லை என்று மத்திய அரசின் அதிர்ச்சிப் புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது. இதன்படி, மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் மாணவிகளைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.
நாடு முழுவதும் அரசு, தனியார் துறைகளைச் சேர்ந்த 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில் சுமார் 97 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை மொத்தம் 26.5 கோடிக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இதில் 44.3% பேர் அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள். சுமார் 20 சதவீதம் மாணவர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வருகின்றனர். தனியார் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 35 சதவீதமாக உள்ளது. இதில் 3.8 கோடி மாணவர்கள் உயர்நிலைப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
UDISE அறிக்கை
இதற்கிடையே மத்தியக் கல்வி அமைச்சகத்தால் 2012- 13 ஆம் ஆண்டில் பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு (UDISE) உருவாக்கப்பட்டது. தொடக்கக் கல்விக்கான அமைப்பையும் மேல்நிலைக் கல்விக்கான அமைப்பையும் ஒருங்கிணைத்து இந்தத் தகவல் மையம் தோற்றுவிக்கப்பட்டது. பள்ளிக் கல்வி குறித்த மிகப்பெரிய தகவல் மேலாண்மை அமைப்பு இது.
இதன் மேம்படுத்தப்பட்ட அமைப்பே UDISE+ (மேம்படுத்தப்பட்ட பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு) ஆகும். இந்த அமைப்பு சார்பில் 2019- 20 ஆம் கல்வி ஆண்டில் இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அனைத்திலும் பள்ளிக் கல்வியின் படிநிலைகளில் படிப்பைப் பாதியில் நிறுத்திய மாணவ, மாணவிகள் குறித்த அறிக்கை வெளியாகி உள்ளது.
இடைநிற்கும் 30 சதவீத மாணவர்கள்
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களின்படி, நாட்டில் சுமார் 30 சதவீத மாணவர்கள், உயர்நிலைப் பள்ளிக் கல்வியில் இருந்து மேல்நிலைக் கல்விக்குச் செல்வதில்லை.
மேல்நிலைக் கல்வியில் இருந்தும் ஆரம்பக் கல்வியில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் இடைநிற்கிறார்கள். எனினும் நடுநிலைப் பள்ளி மாணவிகள், மாணவர்களை விட அதிகமாக இடைநிற்றல் அபாயத்துக்கு ஆளாகின்றனர். உயர்நிலைக் கல்வியைப் பொறுத்தவரை நாட்டின் ஒட்டுமொத்த இடைநிற்றல் விகிதம் 17.3 ஆக உள்ளது. இதுவே நடுநிலைக் கல்வியைப் பொறுத்தவரை 1.8% ஆகவும் தொடக்கக் கல்வியில் 1.5% ஆகவும் உள்ளது.
தொடக்கக் கல்வியில் இடைநிற்கும் மாணவர்களின் விகிதம் 1.7 ஆகவும் மாணவிகளின் விகிதம் 1.2 ஆகவும் உள்ளது. நடுநிலைக் கல்வியில் மாணவ, மாணவிகளின் இடைநிற்றல் முறையே 1.4 சதவீதமாகவும் 2.2 சதவீதமாகவும் உள்ளது. இதுவே உயர்நிலைக் கல்வியில் 18.3 சதவீதம் மாணவர்களும் 16.3 சதவீதம் மாணவிகளும் படிப்பை இடையில் நிறுத்தி விடுகின்றனர்.
அதிகபட்ச இடைநிற்றல் விகிதம்
19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 9, 10-ம் வகுப்புகளில் இடைநிற்றல் விகிதம் நாட்டின் ஒட்டுமொத்த இடைநிற்றல் விகிதத்தை (17.3) விட அதிகமாக உள்ளது. குறிப்பாக திரிபுரா, சிக்கிம், நாகலாந்து, மேகாலயா, மத்தியப் பிரதேசம், அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இடைநிற்றல் விகிதம் 25 ஆக உள்ளது. இன்னும் சில மாநிலங்களில் இது 30 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.
வடகிழக்கு மற்றும் வடக்குப் பிராந்திய மாநிலங்கள் அதிகபட்ச இடைநிற்றல் விகிதத்தைக் கொண்டிருக்கின்றன. தலைநகர் டெல்லியில்கூட இடைநிற்றல் விகிதம் 20 ஆக உள்ளது.
பஞ்சாப்பில் குறைவு
இந்த வரிசையில் பஞ்சாப் மாநிலத்தில் மிகக் குறைவாக 1.5 சதவீத மாணவர்களே, பள்ளிக் கல்வியில் இருந்து இடைநிற்கின்றனர். 5 மாநிலங்கள் 10 சதவீதத்துக்கும் குறைவான இடைநிற்றல் விகிதத்தைக் கொண்டுள்ளன. அவை சண்டிகர் (9.5%), கேரளா (8%), மணிப்பூர் (9.6%), தமிழ்நாடு (9.6%), உத்தராகண்ட் (9.8%) ஆகும்.
இந்த வகையில் சில மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உயர்நிலை அளவில் அதிகபட்சத் தேர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன. குறிப்பாக பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட தேர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் மாணவிகள் இடைநிற்றல் விகிதம் பூஜ்யமாக உள்ள நிலையில், உயர்நிலைக் கல்வியில் அதிகபட்சமாக அசாம் 35.2 சதவீத மாணவிகள் இடைநிற்கின்றனர். கோவா உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் (21.2) மாணவிகளைக் காட்டிலும் (11.8%) சுமார் 10 சதவீதம் அதிகமாக உள்ளது
இந்த அறிக்கையின்படி, மாணவிகளின் ஒட்டுமொத்த இடைநிற்றல் விகிதம் மாணவர்களை விட 2 சதவீதம் குறைவாக உள்ளது.
கரோனா காலத்தில் குழந்தைத் திருமணம், பொருளாதார இழப்பு, பெற்றோரை இழப்பது என இடைநிற்றல் அபாயம் இன்னும் அதிகரித்துள்ள சூழல், பள்ளிக் கல்வியின் மீது அரசுகள் செலுத்தவேண்டிய அக்கறையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in