

மத்திய அமைச்சர் சரியில்லை என்றால் அதை பிரதமர் கவனிப்பார். நீதிமன்றம் ஏதும் செய்ய முடியாது என்று மத்திய அமைச்சர் வி.கே.சிங்கை பதவிநீக்கம் செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மத்திய அமைச்சர் வி.கே.சிங் கடந்த பிப்ரவரி மாதம் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் பகுதி குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அந்த கருத்து, அவரின் உறுதிமொழி ஏற்புக்கு விரோதமாக இருப்பதாகக் கூறி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்து.
தமிழகத்தைச் சேர்ந்த அறிவியல் வல்லுநர் சந்திரசேகரன் ராமசாமி என்பவர் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அமைச்சர் வி.கே.சிங் அளித்த பேட்டியில், “ சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுப்பகுதியில் இரு தரப்பு ராணுவமும் அத்துமீறியுள்ளன. சீனா 10 முறை அத்துமீறியிருந்தால், இந்திய ராணுவம் 50 முறை மீறியிருக்கலாம். ஆனால், இந்த கணக்குப் பற்றி யாருக்கும் தெரியாது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்தப் பேட்டிக் குறித்து குறிப்பிட்டு சந்திரசேகரன் ராமசாமி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில் “ மத்திய அமைச்சர் வி.கே.சிங் தனது பதவிஏற்பு உறுதிமொழிக்கு விரோதமாகவும், இந்திய ராணுவத்துக்கு விரோதமாகவும், சீன எல்லை விவகாரத்தில் பேசியுள்ளார்.
சாமானியர் இதுபோன்று பேசியிருந்தால், அரசு அவரை சும்மாவிட்டிருக்குமா. ஆதலால், வி.கே.சிங்கை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி அமர்வு கூறுகையில் “ மத்திய அமைச்சர் பேசிய வார்த்தை, விதம் உங்களுக்குப் பிடிக்காவிட்டால், நீங்கள் மனுத்தாக்கல் செய்து அவரை பதவி நீக்கம் செய்யக் கோருவீர்கள்.
ஒரு அமைச்சர் சரியாக செயல்படாவிட்டால், அது குறித்து பிரதமர் கவனித்துக்கொள்வார், நடவடிக்கை எடுப்பார். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் ஏதும் செய்ய முடியாது.
மனுதாரர் ஒரு அறிவியல் விஞ்ஞானி என்று தெரிவித்துள்ளார். இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்வதற்கு பதிலாக, மனுதாரர், தனது சக்தியை, செயல்திறனை, நாட்டின் நலனுக்காகச் செலவிடலாமே. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்” எனத் தெரிவித்தனர்.