

காஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று அதிகாலை மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதையடுத்து எல்லை பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
ஜம்மு விமானதள வளாகத்தில் உள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த விமானப்படை நிலைய தொழில்நுட்ப பகுதியில் அண்மையில் அடுத்த குண்டு வெடித்தது. அந்த வெடிகுண்டுகள் குறைந்த வீரியம் கொண்ட ஐஇடி வகையைச் சேர்ந்தவை என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்தது.
ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் மூலம் இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த 2 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதும் உடனடியாக ராணுவம் செயலில் இறங்கியது. ராடார் மூலம் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டதால் தொடர் தாக்குதல் நடத்தப்படவில்லை. இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லைப்பகுதியில் இன்று அதிகாலை மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெரிய அளவில் தாக்குதல் இல்லையென்றாலும் பாகிஸ்தானில் எல்லைப்பகுதியில் இருந்து தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இவை வெறும் ட்ரோன் மட்டுமே வந்துள்ளது. ஆனால் அதில் வெடிமருந்துகள் ஏதும் வைக்கப்படவில்லை. இதனையடுத்து எல்லை பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். ட்ரோன் தாக்குதலை தடுத்து நிறுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.