

நாடுமுழுவதும் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதன் பின்னர், கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில் தமிழகத்தில் செங்கல்பட்டு, கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட 25 மாவட்டங்களில் அண்மையில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டியது.
சென்னையில் ரூ.100- ஐ கடந்தது
இந்தநிலையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்துள்ளது.
சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 99.80 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை 33 காசுகள் அதிகரித்து லிட்டர் 100.13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் விலை மாற்றம் ஏதும் இன்றி நேற்றைய விலையில் லிட்டர் 93.72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லியில் பெட்ரோல், லிட்டர் 99.16 ரூபாய், டீசல் லிட்டர் 89.18 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மும்பையில் பெட்ரோல், லிட்டர் 105.24 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 96.72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கொல்கத்தாவில் பெட்ரோல், லிட்டர் 99.04 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 92.03ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.