

2025-ஆம் ஆண்டிற்குள் 5 ட்ரில்லியன் டாலர் அளவிற்கு இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கு சரக்கு மற்றும் சேவை வரி உதவிகரமாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“ஜிஎஸ்டியின் பயணமும் அதன் எதிர்காலமும்- தற்சார்பு இந்தியா” என்ற கருப்பொருளுடன் இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையதள கருத்தரங்கில் பேசிய அவர், ஒரே தேசம், ஒரே சந்தை, ஒரே வரி என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி, தற்போதைய பெருந்தொற்று காலத்திலும் வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு பேருதவியாக இருப்பதாகவும், எதிர்காலத்திலும் உதவிகரமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்த வரி சேவை, கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டதாகவும், 4 ஆண்டுகளுக்குப் பிறகு வர்த்தக நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை இந்த சேவை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.
டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கு மிகப்பெரும் பங்கு இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். வெளிப்படைத்தன்மை வாயிலான மற்றும் உரிய காலத்தில் முடிவுகளை எடுக்கும் முறையை மேம்படுத்துவதற்கு செயல்திறன் மற்றும் நிதி சார்ந்த தணிக்கை மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து உரையாற்றிய அமைச்சர், காலதாமதமாக வழங்கப்படும் தொகைகளே முக்கிய காரணமாக விளங்குவதாகவும், அவை சரிசெய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சரக்கு மற்றும் சேவை வரி, நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள போதும், இன்னமும் அதனை மேம்படுத்துவதற்கு வாய்ப்பிருப்பதாக அவர் கூறினார். ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, தகவல் தொடர்பு மற்றும் சீர்படுத்துதலில் அனைத்து பங்குதாரர்களும் பங்கேற்க வேண்டும் என்றார்.