

கரோனா 3-வது அலை வந்தால், அதை எதிர்கொள்ள இந்திய மருத்துவத்துறையின் உள்கட்டமைப்பு சிறப்பாகத் தயாராகியுள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய உலகளாவிய கூட்டமைப்பின் கூட்டம் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
கரோனா 3-வது அலை வரக்கூடாது, 3-வதுஅலையை மக்கள் யாரும் விரும்பவில்லை. ஒருவேளை 3-வது அலை ஏற்பட்டால், அதை எதிர்கொள்ளவும், சமாளிக்கவும் இந்திய மருத்துவத்துறையின் உள்கட்டமைப்பு சிறப்பாகத் தயாராகியுள்ளது.அதில் கூடுதலான கவனத்தை அரசு செலுத்தியுள்ளது.
மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 2-ம் நிலை, 3-ம் நிலை நகரங்களிலும் மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
பல்வேறு தரப்பு மக்களையும் கருத்தில் கொண்டு, குறிப்பாக குழந்தைகளை மனதில் வைத்து, உள்கட்டமைப்புக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, அதற்கான வசதிகளை ஏற்படுத்துதலும் வேகமாகச் செல்கிறது.
குழந்தைகளுக்கான மருத்துவமனை மற்றும் படுக்கை வசதிகளை வலுப்படுத்த ரூ.23,220 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் சுகாதாரகட்டமைப்பை வலுப்படுத்த மெட்ரோ நகரங்கள் தவிர்த்து, பிற நகரங்களி்ல் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி அளவில் கடன் உறுதித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நாள்தோறும் 45 லட்சம் முதல் 50 லட்சம் மக்கள் வரை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 33 கோடி மக்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தடுப்பூசி செலுத்தும் பணி நகர்ந்து வருவதைப் பார்க்கும் போது, தொற்றால் எளிதாகப் பாதிக்கப்படும் மக்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்தி கரோனாவிலிருந்து காக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கடந்த 8 மாதங்களாக ஜிஎஸ்டி வரி வருவாயும் அதிகரித்து வருகிறது, ரூ.ஒரு லட்சம் கோடிக்கு அதிகமாகச் செல்கிறது. தேசிய அளவில் எந்த ஊரடங்கும் இல்லை, பொருளாதார நடவடிக்கையும் வேகமெடுத்துள்ளதால், இந்த வரிவருவாய் தொடர்ந்து அதிகரிக்கும் என நம்புகிறேன்.
கடந்த நிதியாண்டில் கரோனா வைரஸ் காரணமாக, எதிர்பார்த்த அளவு அரசுத்துறை பங்குகள் விற்பனை நடக்கவில்லை. இந்த ஆண்டு பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதால், அதிகமாகக் கவலைப்படத்த தேவையில்லை. தடுப்பூசி செலுத்தும் பணியும் நடக்கிறது. ஆதலால், தனியார்மயமாக்கும் பணிகள் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டில் அரசுத்துறைப் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.