

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அம்மாநில நிலமற்ற விவசாயிகளுக்கு ரூ.385.98 கோடி நிதி உதவி வழங்கியுள்ளார்.
கரோனா பெருந்தொற்றினால் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளான ஒடிசா மாநில விவசாய மக்களுக்குஉதவும் வகையில் ரூ.1,000 வீதம்பயனாளிகளுக்கு வழங்கியுள்ளார். இந்தத் தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில்செலுத்தும் திட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 17,89,103 நிலமற்ற விவசாயிகள் பயன் அடைவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
ஜூன் மாத இடையில் முதல்வர் நவீன் பட்நாயக் ரூ.1,690 கோடி நிதி உதவி திட்டத்தை அறிவித்தார். இதன் கீழ் நிலமற்ற விவசாயிகள், நகர்ப்புற ஏழைகள், கட்டிடத் தொழிலாளர்கள், பழங்குடியினர் ஆகியோர் பயனாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வாழ்வாதார உதவி மற்றும் வருமான ஊக்குவிப்பு திட்டமான காலியா திட்டம் மூலம் இது செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் நவீன் பட்நாயக் கூறும்போது, "காலியா திட்டம் பல லட்சக் கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயல்திறன் கொண்ட மகத்தான திட்டமாக விளங்குகிறது. இந்த கரோனா கால நெருக்கடியிலும் மாநிலத்தின் பொருளாதாரம் சமாளிக்கும் வகையில் இருக்க விவசாயிகளின் பங்குமகத்தானது" என்றார்.- பிடிஐ