

கச்சா பாமாயில் மீதான வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் பாமாயில் விலை குறைய வாய்ப்புள்ளது. பணவீக்கம் காரணமாக அதிகரித்து வரும் விலையைக் கட்டுப்படுத்த சமையல் எண்ணெய் மீதான வரியைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்து இந்த நடவடிக்கை யை எடுத்துள்ளது. இதன்படி கச்சா பாமாயில் மிதான இறக்குமதி வரி 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக சர்வதேச சந்தையில் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் கச்சா பாமாயில் விலை குறைந்து வருகிறது. ஆனால் உள்நாட்டில் பாமாயில் விலை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு கச்சா பாமாயில் மீதான வரியைக் குறைப்பதாக நுகர்வோர் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக நிதி அமைச்சகம் ஜூன் 29-ல் வெளியிட்ட சுற்றறிக்கையில், கச்சா பாமாயில் மீீதானஇறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த வரி குறைப்பு விகிதமானது இந்த ஆண்டு செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி குறைப்புக்குப் பிறகு கச்சா பாமாயில் மீதான இறக்குமதி வரி 30.25 சதவீதமாக இருக்கும். இதில் 17.50 சதவீதம் வேளாண் செஸ், சமூக மேம்பாட்டு செஸ் 10 சதவீதமும் அடங்கும்.
சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான கட்டுப்பாடுகளையும் தளர்த்துமாறு உணவு மற்றும் பொதுவிநியோக துறை பரிந்துரைத்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இறக்குமதி பொருள்களில் பொதுப் பிரிவில் சேர்ப்பதன் மூலம் அது குறைந்த விலையில் உள்நாட்டில் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜூன் 30-ம் தேதிவர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் கச்சா பாமாயில்ஆகியவை மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அது பொதுவான இறக்குமதி பட்டியலில் இணைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இது உடனடியாக அமல்படுத்தப்படுவதோடு இந்த நடைமுறை டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.
இதனால் பிற உணவுப்பொருட்களுக்கு துறைமுகங்களில் உடனடியாக இறக்குமதி அனுமதி வழங்கப்படுவதைப் போல கச்சா பாமாயில் மற்றும்சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.