

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான குல்ஷண் குமார், 'டி - சீரிஸ்' என்ற பெயரில் ஆடியோ கேசட் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். அவரது தொழில், 1990-களில் கொடிக்கட்டி பறக்க தொடங்கியது. .
இந்நிலையில் 1997-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி குல்ஷண் குமாரை மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை பெருநகர நீதிமன்றம், தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியான ரவுஃப் மெர்ச்சண்ட்டுக்கு 2002-ல் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதுபோல குல்ஷண் குமாரின் தொழில் போட்டியாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான ரமேஷ் தவுரானியை விடுதலை செய்தும் உத்தரவிட்டது.
இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மும்பைஉயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அதில், "ரவுஃப் மெர்ச்சண்ட்மீதான குற்றங்கள் சந்தேகத்துக்குஇடமின்றி நிரூபிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப் படுகிறது. இதுபோல ரமேஷ் தவுரானியை விடுதலை செய்தது செல்லும்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.