

மத்திய அரசின் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)குறைப்பு காரணமாக வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வரி செலுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேவை வரி, மதிப்பு கூட்டல் வரி (வாட்), 13 வகையான செஸ்உள்ளிட்ட 17 வரிகளை உள்ளடக்கியதாக ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.
வரி செலுத்துவோரின் வசதிக்காக பல்வேறு கட்டங்களில் வரிகுறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் வரி செலுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்போது கரோனா வைரஸ் பரவல் சூழலில் வர்த்தகர்பலனடையும் விதமாக பல்வேறு பரிந்துரைகளின் பேரில் வரிகுறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக சரக்கு மற்றும் சேவை வரி 400 பொருள்கள் மீது குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல 80 வகையான சேவை மீதும் வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இது முன்பிருந்த நிலையை விடமேம்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு சூழலில் ஆண்டுக்கு ரூ. 40 லட்சம் வரையிலான வர்த்தகம் புரிவோருக்கு வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரூ.1.5 கோடி வரையிலான வர்த்தகம் புரிவோர் ஒருங்கிணைந்த வரியாக ஒரு சதவீதம் செலுத்தும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
சேவைத் துறையைப் பொருத்தமட்டில் ஆண்டுக்கு ரூ.20 லட்சம்வரையிலான வர்த்தகம் புரிவோருக்கு ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல ரூ.50 லட்சம் வரையிலான வருமானம் ஈட்டுவோர் ஒருங்கிணைந்த வரியாக 6 சதவீதம் செலுத்தும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பானது தற்போது வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த வரி விதிப்பு முறையாக உள்ளது. ஜிஎஸ்டி முறைக்கு முந்தைய சூழலில் வரி விதிப்பானது பல அடுக்குகளைக் கொண்டதாக இருந்தது. இது தவிர்க்கப்பட்டதால் வர்த்தகர்கள் வரி செலுத்துவதோடு, ரிட்டர்னும் தாக்கல் செய்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் 66 கோடி ரிட்டர்ன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வரி விதிப்புமுறையின் கீழ் 1.3 கோடி வர்த்தகர்கள் பதிவு செய்துள்ளனர் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2017-ம் ஆண்டு ஜூலை 1-ம்தேதி ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டு, நான்கு ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி இந்த வரி விதிப்பு முறையின் சாதகங்களை நிதி அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.-பிடிஐ