

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கரோனா தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்குகிறது. தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மாநில அரசுகளுக்கு 15 நாட்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுகிறது. எந்தெந்த நாட்களில் எவ்வளவு தடுப்பூசி வழங்கப்படும் என்ற முழுமையான விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இதன்பிறகும் தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மாநிலங்களில் பிரச்சினை இருந்தால், மாநில அரசுகள் தங்கள் திட்டத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம். கரோனா காலத்தில் சில தலைவர்கள், அநாகரிக அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தலைவர்களுக்கு அனைத்து விவரங்களும் தெரியும். ஆனால் அர்த்தமற்ற அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். மாநில தலைவர்கள் கரோனா தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதில் தங்களது முழு கவனத்தையும் செலுத்த வேண்டுகிறேன். தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.
இவ்வாறு அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.