

கரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவர்கள் சிறப்பான சேவை புரிந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு சுயநலமின்றி அயராது பாடுபடும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தேசிய மருத்துவர்கள் தினம் ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் பிரபல மருத்துவருமான பிதான் சந்திர ராயின் பிறந்த மற்றும் நினைவு தினம் ஜூலை 1 ஆகும். அவரை கவுரவப்படுத்தும் வகையிலும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் காணொலி மூலம் நடத்திய நிகழ்ச்சியில் மருத்துவர்கள் மத்தியில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:
கரோனா பெருந்தொற்றால் கடந்த ஒன்றரை ஆண்டாக நாட்டுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோல மருத்துவர்கள் பலரும் சுகாதார ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டனர். ஆனாலும் அவர்கள் தங்கள் கடமையிலிருந்து விலகாமல் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். கரோனாவுக்கு எதிராக நடைபெறும் போரில் மருத்துவர்கள் மிகச்சிறப்பாக சேவை புரிந்து வருகிறார்கள்.
கரோனாவால் தாங்கள் பாதிக்கப்பட்ட போதிலும், லட்சக்கணக்கான நோயாளிகளின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றி உள்ளனர். பொதுமக்களின் உயிரை காக்கும்பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களில் சிலர் தங்கள் உயிரையும் தியாகம் செய்துள்ளனர்.
மருத்துவர்களின் அனுபவமும் அறிவும் கரோனாவுக்கு எதிரான போருக்கு பெரிதும் உதவியாக உள்ளது. குறிப்பாக கரோனா பரவலை தடுப்பதற்கான விதிமுறைகளை உருவாக்கி அதை அமல்படுத்துவதில் மருத்துவர்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள். இதன் காரணமாக வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது நம்நாட்டில் கரோனா பரவல் நிலவரம்கட்டுக்குள் உள்ளது. இதற்காக நாட்டில் உள்ள 130 கோடி இந்தியர்கள் சார்பிலும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
மருத்துவர்களுக்கு எதி ரான குற்றங்களை தடுக்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபடும் மருத்துவர்களுக்காக இலவச காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
எந்த ஒரு நோயையும் முன்கூட்டியே அறிந்து அதற்குரிய சிகிச்சை அளிக்க தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மருத்துவர்கள் முன்வர வேண்டும்.
நடப்பு நிதியாண்டில் சுகாதாரத் துறைக்கான பட்ஜெட் தொகையை மத்திய அரசு 2 மடங்காக (ரூ.2 லட்சம் கோடியாக) உயர்த்தி உள்ளது.மேலும் நாடு முழுவதும் மருத்துவகட்டமைப்பு வசதியை பலப்படுத்துவதற்காக ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன் உத்தரவாத திட்டம் 2 தினங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது.
மேலும் மருத்துவர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டால், உலக மக்களும் யோகா மேற்கொள்ள முன்வருவார்கள். இதற்கான நடவடிக்கையை எடுக்க மருத்துவ சங்கம் முன்வர வேண்டும். யோகா மூலம் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட தலைவர்கள் பலரும் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரி வித்துள்ளனர்.-பிடிஐ