

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர் பாக அவரது கணவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து டெல்லி காவல் துறை ஆணையர் பி.எஸ். பாஸி நேற்று கூறியதாவது:
சுனந்தா புஷ்கரின் கணவர் சசி தரூரிடம் மீண்டும் விசாரணை நடை பெற்றது. இந்த வழக்கு தொடர்பாக என்னென்ன விவரங்கள் தேவையோ அதையெல்லாம் அவரிடம் கேட்டு பெற்றுள்ளோம். எஸ்ஐடி விரும்பினால் மீண்டும் அவரை அழைத்து விசாரணை நடத்தும்.
சுனந்தா மரணம் தொடர்பான விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் எஸ்ஐடி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சுனந்தாவின் உடல் பாகங்களை ஆய்வு செய்த அமெரிக்க புலனாய்வு அமைப்பு (எப்பிஐ) அறிக்கை சமர்ப் பித்திருந்தது. அதன் மீது எய்ம்ஸ் மருத்துவக் குழு வழங்கிய கருத்தின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக அல்ப்ராக்ஸ், அயோடிகெய்ன் ஆகிய மருந்து கள் சுனந்தாவின் வயிற்றில் இருந்த தற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. இதுவே அவரது மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் எவ்வித தவறும் நடைபெறவில்லை என்று சசி தரூர் கூறி வருகிறார்.
சுனந்தா புஷ்கர் (51) கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இறந்து கிடந்தார். டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.