2 மகன்களை அடகு வைத்து ரூ.5 ஆயிரம் வாங்கிய பெண்

2 மகன்களை அடகு வைத்து ரூ.5 ஆயிரம் வாங்கிய பெண்
Updated on
1 min read

தாதுப்பொருள் வளம் மிக்க ஒடிசா மாநிலத்தில் வறுமை காரணமாக தனது கணவரின் இறுதிச் சடங்கு செலவுக்காக 2 மைனர் மகன்களை அடகு வைத்த சம்பவம் நெஞ்சை உருக வைத்துள்ளது. கடந்த குடியரசு தினத்தன்று நடந்த சம்பவம் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கியோஞ்சர் மாவட்டம் கதுலி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடிவாசி சாவித்ரி நாயக். கூலி வேலை செய்து வந்த இவரது கணவர் ரெய்பாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சேமித்து வைத்திருந்த பணம் முழுவதையும் செலவழித்த போதும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. கடந்த மாதம் 26-ம் தேதி ரெபியா இறந்தார்.

இந்நிலையில், அவரது இறுதிச் சடங்கை நடத்துவதற்குக்கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டார் சாவித்ரி. இதையடுத்து, பலரிடம் கடன் வாங்கி கணவரின் இறுதிச் சடங்கை முடித்துள்ளார். பிறகு அந்தக் கடனை அடைப்பதற்காக தனது மகன்களான முகேஷ் (13) மற்றும் சுகேஷ் (11) ஆகிய இருவரையும் அதே ஊரைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.5 ஆயிரத்துக்கு அடகு வைத்துள்ளார்.

இதனால் அந்த இருவரும் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டனர். இவர்கள் இப்போது கால்நடைகளை மேய்த்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சாவித்ரி கூறும்போது, “கணவர் இறந்துவிட்டதால் வருமானம் இல்லை. இதனால் எனது குழந்தைகளுக்கு உணவு கூட கொடுக்க முடியாத நிலையில் 2 மகன்களை அடகு வைத்தேன்” என்றார். இவருக்கு ஆகாஷ் (9), சிலாரி (8) மற்றும் வர்ஷா (4) என மேலும் 3 குழந்தைகள் உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அதிகாரி எஸ்.நாயக் அந்த கிராமத்துக்குச் சென்று விசாரணை நடத்தி உள்ளார். சாவித்ரிக்கு விதவை ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in