

அரசியலமைப்புச்சட்டத்தின் 10-வது அட்டவணையின் கீழ் எம்எல்ஏக்கள், எம்.பி.க்களைத் தகுதி நீக்குவது தொடர்பாக கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மே.வங்க காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரனாஜித் முகர்ஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “ எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் அளித்த மனு மீது குறித்த காலத்துக்குள் முடிவு எடுக்க சபாநாயகருக்கான நெறிமுறைகளை மத்திய அரசு உருவாக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு “ எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் தகுதி நீக்க மனு மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என்பதுகுறித்து நாடாளுமன்றம்தான் சட்டம் இயற்ற முடியும்.
நாங்கள் கர்நாடக எம்எல்ஏ வழக்கில் அளித்த தீர்ப்பை படித்துவிட்டு வாருங்கள் ”எனத் தெரிவித்தார்.
2019்ம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் சுருக்கமான விவரம்:
2019ம் ஆண்டு தீர்ப்பு என்ன சொல்கிறது?
கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 23-ம்தேதி ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்வராக இருந்த குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியின் கொறடாக்கள் தங்கள் எம்எல்ஏக்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
ஆனால், காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு மும்பையில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கினர். நம்பிக்கை வாக்கெடுப்பிலும் இந்த எம்எல்ஏக்கள் பங்கேற்காததால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சி கவிழ்ந்தது.
இதையடுத்து காங்கிரஸ், ஜேடிஎஸ் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் 17 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவு பிறப்பித்தார். இதன் மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் 2023-ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் சபாநாயகர் ரமேஷ் உத்தரவிட்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சபாநாயகர் உத்தரவை எதிர்த்து 17 எம்எல்ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு விசாரிக்கப்பட்டு, கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
“ கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யும் சபாநாயகரின் உத்தரவு செல்லும், அதேசமயம் அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட 2023ம் ஆண்டுவரை தடை விதித்து சபாநாயகரின் உத்தரவிட அதிகாரம் இல்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட வேண்டும், அவர்கள் வெற்றி பெற்றால் அமைச்சர் உட்பட வேறு எந்த அரசு பதவியை வகிக்கவும் தடையில்லை
எம்எல்ஏக்களே தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கு இருந்தாலும், எத்தனை காலத்துக்கு எம்எல்ஏக்கள் தகுதிநீக்கப்படுவார்கள், தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்படுவார்கள் என்று வரையறை செய்ய சபாநாயகருக்கு அதிகாரமில்லை.
அரசியலமைப்புச்சட்டத்தின் 10-வது அட்டவணையின்படி, சபாநாயகர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, தகுதிநீக்கம் செய்யலாம், ஆனால், காலவரையறை விதிக்க முடியாது.
ஜனநாயக மதிப்புகள், அரசியலமைப்புச்சட்டம் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை பராமரிப்பது சபாநாயகருக்கு முக்கியமானது. ஆனால், சமீபகாலமாக சபாநாயகர்கள், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக நடப்பது அதிகரித்து வருகிறது.
வாக்களித்த மக்களுக்கு நிலையான அரசு அமைவது தடுக்கப்பட்டு எம்எல்ஏக்கள் குதிரைபேரத்தில் விலைக்கு வாங்கப்படுகின்றனர், ஊழல்கள் நடக்கின்றன.
இப்படியான சூழலில் அரசியலமைப்புச்சட்டத்தின் 10-வது அட்டவணையை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். அதில் உள்ள ஷரத்துகளை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு எடுக்க வேண்டும். ஜனநாயகவிரோத பழக்கங்கள் கைவிடப்பட வேண்டும்” என தீர்ப்பளி்க்கப்பட்டது.