

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடி இடையிலான நட்புறவில் எந்த வேறுபாடும் இல்லை, விரிசலும் இல்லை என்று மகாராஷ்டிரா அமைச்சரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான அஸ்லாம் ஷேக் தெரிவித்துள்ளார்.
பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாகவும், ஆளும் மகாவிகாஸ் அகாதி அரசைச் சேர்ந்தவர்களுக்கு, சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமானவரித்துறை மூலம் நெருக்கடி தரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பிரதமர் மோடிக்கும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இடையிலான நட்புறவில் விரிசல் விழுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியானது.
ஆனால், இந்த குற்றச்சாட்டை சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் மறுத்தார்.அரசியல் ரீதியாக இரு தலைவர்களும் பிரிந்திருந்தாலும், இருவருக்கும் இடையே வலிமையான நட்புறவு இருக்கிறது என்று ராவத் தெரிவித்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், அமைச்சருமான அஸ்லாம் ஷேக்நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடிக்கும், முதல்வர் உத்தவ் தாக்கரே இடையே நட்புறவு வலுவாக இருக்கிறது என்ற கருத்தால் என்ன தவறு இருக்கிறது. பாஜக அல்லாத பிறகட்சிகள் ஆளும் மாநில முதல்வர், பிரதமருடன் நட்புறவில் இருக்கக்கூடாதா, எதற்காக இதை ஊடகங்கள் பெரிதாக மாற்றுகிறார்கள்.
ஒரு மாநிலத்தின் முதல்வர், பிரதமர் மோடியுடன் நல்ல உறவில் இருந்தால், அதில் எந்தத் தவறும் இல்லையே. பாஜகவுடன், கடந்த 20 ஆண்டுகால நட்புறவில் முதல்வர் உத்தரவ் தாக்கரே இருந்துள்ளார். அரசியல் ரீதியாக இருவரும் பிரிந்திருக்கலாம், ஆனால் இருவரின் நட்புறவில் எந்தவிதமான வேறுபாடும், விரிசலும் இல்லை.
முதல்வர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடியுடன் நல்ல நட்புறவில் இருந்தால், மாநிலத்தின் வளர்ச்சிக்கு நல்லதுதானே. அரசியல் ரீதியாக எங்களின் சித்தாந்தம், கொள்கைகளை வேறு, வேறாக இருக்கலாம், அதற்காக தனிப்பட்ட முறையில் நட்புறவு மோசமாகிவிட்டது, நட்புறவில் இ்ல்லை என்று அர்த்தமில்லை.
இவ்வாறு ஷேக் தெரிவித்தார்.