Published : 01 Jul 2021 08:20 AM
Last Updated : 01 Jul 2021 08:20 AM

கரோனா 3-வது அலையைத் தடுக்க நடவடிக்கை: அமைச்சர்களுக்குப் பிரதமர் மோடி அறிவுரை


நாட்டில் கரோனா வைரஸின் 3-வது அலையைத் தடுக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும், நடவடிக்கைளையும் எடுக்க வேண்டும். தடுப்பூசித் திட்டத்தை போர்க்கால வேகத்தில் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

கரோனா வைரஸ் 2-வது அலை நாட்டில் மெல்லக் குறைந்து வருகிறது, கரோனாவில் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் குறைந்து வருகிறது. கரோனா பாதிப்பைக் குறைக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.

ஆனாலும், இந்த வேகம் போதுமானதாக இல்லை, அதிகமான மக்களுக்கு இன்னும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த வேகத்தில் தடுப்பூசித் திட்டம் சென்றால் கரோனா 3-வது அலை வருவதற்கும் வாய்ப்புள்ளது என்றும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், கரோனா தடுப்பூசித் திட்டம், 3-வது அலையைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய அமைச்சர்கள் குழுவுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் ஏறக்குறைய 4 மணிநேரம் நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் குறித்தும், தற்போதைய நிலை குறித்தும் நிதிஆயோக்கின் சுகாதார உறுப்பினர் வி.கே.பால் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த கூட்டத்தில் பேசப்பட்ட விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் ஒருவர் கூறுகையில் “ இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி 30 முதல் 40 நிமிடங்கள் வரை பேசினார். தற்போது நாட்டில் தடுப்பூசி கொள்முதல் செய்யப்படுவதும், இருப்பு வைத்திருப்பதும் போதுமானதாக இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து வருகிறது, அந்த அச்சம் குறையவில்லை என்று தெரிவித்த பிரதமர் மோடி, ஒவ்வொரு அமைச்சரும் தங்களுக்கு உட்பட்ட தொகுதியில் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த வேண்டும். போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் பணியைச் செய்ய வேண்டும். மூன்றாவது அலையைத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்

தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை எவ்வாறு சிறந்த முறையில் கொண்டு செல்வது குறித்து மக்களிடம் கருத்துக்களைப் பெற வேண்டும். கரோனா வைரஸ் பரவலை முடிவுக்கு கொண்டு வரும் காலத்தில் மிக அதிகமான தொலைவில் நாம் இருக்கிறோம் என்பதை அமைச்சர்கள் நினைவில் கொண்டு, 3-வது அலையைத் தடுக்க முயற்சிகளை எடுக்க வேண்டும். தங்கள் துறையில் கிடப்பில் உள்ள, முடிக்காத திட்டங்களை விரைவில் முடிக்க அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்” என்று தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், விமானப்போக்குவரத்து துறை அமைச்சகம், தொலைத்தொடர்புத்துறை சார்பிலும் அறிக்கை அளிக்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x