Published : 01 Jul 2021 07:37 AM
Last Updated : 01 Jul 2021 07:37 AM

கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசி சான்றிதழை ஏற்காவிட்டால், ஐரோப்பிய பயணிகளுக்கும் கட்டாயத் தனிமை: மத்திய அரசு முடிவு

கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசி : பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி


இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட இந்தியர்களுக்கு கோவின் தளம் மூலம் வழங்கப்படும் சான்றிதழை ஏற்காமல் கட்டாயத் தனிமைப்படுத்தினால், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அளிக்கும் தடுப்பூசி சான்றிதழை ஏற்காமல் கட்டாயத் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் இந்தியா தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தைச்ச் சேர்ந்த மக்கள் பயணம் செய்ய க்ரீன் பாஸ் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஜூலை 1-ம் தேதி முதல் செயல்படுத்தியுள்ளது.

கட்டாயத்தனிமை

இதன்படி, ஐரோப்பிய ஒன்றியம் , உறுப்பு நாடுகள் அனுமதியளித்த தடுப்பூசிகளைச் செலுத்திய மக்கள் அளிக்கும் சான்றிதழ்(க்ரீன் பாஸ்) மட்டுமே ஏற்கப்படும். பிற நாடுகளைச் சேர்ந்த மக்கள் தடுப்பூசி செலுத்தி சான்றிதழ் வழங்கினாலும், அதைஅங்கீகரிக்கப்பட்ட சான்றிதழாக ஏற்காமல், அவர்களை கட்டாயத் தனிமைக்கு உட்படுத்துப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.

4 தடுப்பூசிகள்

ஐரோப்பிய ஒன்றியம் 4 தடுப்பூசிகளுக்கு மட்டுமே அனுமதியளித்துள்ன. அதில், ஃபைஸர், பயோஎன்டெக், மாடர்னா, வேக்ஸ்ஜெர்வியா(அஸ்ட்ராஜென்கா), ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் ஆகிய 4 தடுப்பூசி செலுத்தியவர்கள் அளிக்கும் சான்றிதழ் மட்டுமே ஏற்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதில் அஸ்ட்ராஜென்கா நிறுவனம் இந்தியாவில் தயாரித்த தடுப்பூசியான கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்தியிருந்தாலும் அந்த சான்றிதழை ஏற்கமுடியாது, ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின் வேக்ஸ்ஜெர்வியா தடுப்பூசியைச் செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்த 4 தடுப்பூசியை செலுத்தாமல் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் வரும் வெளிநாட்டு பயணிகள் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் வைத்திருந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.

கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திய இந்தியர்களை தனிமைப்படுத்தாமல் அனுமதி வழங்குவது தொடர்பாக சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனாவல்லா, அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் அனுமதி கோரியுள்ளார்.

மத்திய அமைச்சர் பேச்சு

ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது தொடர்பாக ஐரோப்பிய யூனியனின் உயர்மட்ட பிரதிநிதி ஜோஸப் போரல் பான்ட்லெஸுடன் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்தியஅமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ தடுப்பூசி சான்றிதழ் ஏற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திய இந்தியர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் அனுமதியளிப்பது தொடர்பாகவும், அங்கீகரி்ப்பது தொடர்பாகவும் பேசப்பட்டது. தொடர்ந்து பேச்சு நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்தியா பதிலடி நடவடிக்கை

இதற்கிடையே மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் “கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளை செலுத்தி,கோவின் தளத்தின் மூலம் சான்றிதழ் பெற்ற இந்தியர்களை எந்தவிதத் தடையுமின்றி அனுமதிக்க வேண்டும். அவர்களின் தடுப்பூசி சான்றிதழை ஏற்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் அமைப்பிடம் இந்திய அரசு சார்பில் கோரப்பட்டுள்ளது.

கோவின் தளத்தின் மூலம் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழை ஏற்காமல் இந்தியப் பயணிகளை ஐரோப்பிய நாடுகள் தனிமைப்படுத்தினால், இந்தியாவுக்கு வரும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களையும் அவர்கள் அளிக்கும் தடுப்பூசி சான்றிதழை இந்தியா ஏற்காமல் அவர்களை கட்டாயத் தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.

ஐரோப்பிய ஒன்றிய அமைப்பின் இந்த செயலுக்கு ஆப்பிரிக்க யூனியன் அமைப்பும் கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவிலிருந்தும், குறைந்த வருமானம் உள்ள ஏழை நாடுகளில் இருந்தும் வரும் பயணிகள் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திய நிலையிலும் அவர்களை ஏற்காதது சமத்துவமின்மை” எனத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x